இலங்கையில் மூன்று புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 12, 2022

இலங்கையில் மூன்று புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் உள்ளூர் மருந்து உற்பத்தியை அதிகூடிய இலக்குக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று (12) அரச மருந்து கூட்டுத்தாபனம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கைச்சாத்திடப்பட்டது.

அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி உத்பலா இந்திரவன்ச மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஓய்வுபெற்ற தலைவர் மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன, நகர அபிவிருத்தி, கழிவு அகற்றல் மற்றும் சுகாதார இராஜாங்க அமைச்சர் டொக்டர் நாலக கொடஹேவா, அரச மருந்தகங்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சின் செயலாளர் கலாநிதி சமன் ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஹொரணை, மில்லேவ பிரதேசத்தில் 65 ஏக்கர் நிலப்பரப்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நீண்டகால குத்தகை அடிப்படையில் இந்த தொழிற்சாலைகளை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த தொழிற்சாலைகளில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், எலும்பியல் சாதனங்கள் / மருந்துகள் மற்றும் வழக்கமான மருந்து வில்லைகளின் தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படும்.

குறித்த தொழிற்சாலை இரண்டரை ஆண்டுகளில் நிர்மாணித்து முடிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஏனைய இரண்டு தொழிற்சாலைகளும் அதற்கடுத்த ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலைகளின் கட்டுமானம் நாட்டின் மொத்த மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் தேவையில் 10% - 12% வரை பூர்த்தி செய்ய முடியும்.

புதிய தொழிற்சாலைகளைத் திறப்பதன் மூலம் நிறைய அந்நிய செலாவணியைச் சேமிக்க முடியும். புதிய தொழிற்சாலைகள் சர்வதேச தரப்படுத்தலுக்கு உட்பட்டு ஐரோப்பிய தரநிலைகளுக்கு ஏற்ப கட்டப்படும்.

No comments:

Post a Comment