வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் படுகொலை : முன்னாள் ஆணையாளருக்கு மரண தண்டனை - பொலிஸ் பரிசோதகர் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 12, 2022

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் படுகொலை : முன்னாள் ஆணையாளருக்கு மரண தண்டனை - பொலிஸ் பரிசோதகர் விடுதலை

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் மற்றும் படுகொலை தொடர்பான வழக்கின் தீர்ப்பை, அவ்வழக்கை விசாரித்த கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டிஆரச்சி மற்றும் மஞ்சுல திலகரட்ன ஆகிய மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (12) அறிவித்தனர்.

குறித்த தீர்ப்பு ஜனவரி 06ஆம் திகதி வழங்கப்படவிருந்த நிலையில் அது இன்றையதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 08 கைதிகளை சுட்டுக் கொன்றமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதர் நியோமால் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளரான எமில் ரஞ்சன் லமாஹேவா, சிறைச்சாலைகளின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரியான இந்திக சம்பத் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் பிரதிவாதியான இந்திக சம்பத், வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த சந்தர்ப்பத்திலிருந்து வௌிநாடு சென்றிருந்தார்.

முறைப்பாட்டாளர் தரப்பினரால் அவருக்கு எதிரான சாட்சிகள் முன்வைக்கப்படாத நிலையில், அவரின்றி வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டதுடன், சாட்சி விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பிரதிவாதியை வழக்கிலிருந்து விடுவிக்க நீதிபதிகள் குழாம் தீர்மானித்திருந்தது.

கடந்த 2012 நவம்பர் 09 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலகத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர். ஆயினும் 08 கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே வழக்கைத் தாக்கல் செய்வதற்கு போதுமான சாட்சிகள் கிடைத்தமை அடிப்படையில் சட்டமா அதிபரினால் குறித்த குற்றச்சாட்டுகள் முன்கொண்டு செல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நியோமால் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகிய பிரதிவாதிகளுக்கு எதிராக 33 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்றையதினம் (12) தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி பிரதிவாதிகள் மூவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment