(எம்.எப்.எம்.பஸீர்)
இலங்கையில் வஹாப் வாதம், சலபி கொள்கை மற்றும் ஜிஹாத் சிந்தனையை விதைத்தமை தொடர்பில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய கைது செய்யப்பட்டதாக பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவரான உஷ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் என பரவலாக அறியப்படும் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் இணக்கப்பாட்டுடன், அவருக்கு நேற்று (11) கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே பிணையளித்து உத்தரவிட்டார்.
சட்டமா அதிபரின் இணக்கப்பாடு, மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர்வின் கையெழுத்துடன் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், 300 இலட்சம் ரூபா பெருமதியான சரீரப் பிணையில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்த நீதிவான், வெளிநாடு செல்வதையும் தடுத்து கடவுச் சீட்டையும் முடக்க உத்தரவிட்டார்.
முன்னதாக கடந்த 2019 ஆகஸ்ட் 25 ஆம் திகதி சி.சி.சி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு உஷ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை கைது செய்திருந்தது.
அது 21/4 அன்று கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் மட்டக்களப்பிலும் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை, அடிப்படைவாத குழுக்களுக்கு இலங்கைக்குள் மீள பயங்கரவாதத்தை உருவாக்க அதனை கட்டியெழுப்ப உதவியமை மற்றும் இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவிக்க நடவடிக்கை எடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உஷ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை முதல் தடவையாக கைது செய்திருந்தனர்.
முதல் தடவை கைது செய்யப்பட்டு சி.சி.டி.யினர் உஷ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை விசாரித்த போது, அவ்விசாரணைகளில் திருப்தி இல்லாமல், அவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
அங்கும் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பின்னரேயே, ரி.ஐ.டி.யினரின் கோரிக்கைக்கு அமையவே அவர் தடுப்புக் காவலில் இருந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்தே, கடந்த 2021 மே மாதம் 12 ஆம் திகதி அவர் மீளவும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அது முதல் அவர் இன்று வரை தொடர்ந்து தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம், ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியிலேயே சட்டமா அதிபரின் இணக்கத்துடன் நேற்று அவருக்கு பிணையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment