அரசியல்வாதிகளின் எத்தகைய தவறான செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு உரிமை கிடையாது என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ் துறையை அரசியல் மயமாக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சில அரசியல்வாதிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கைகளில் சிபாரிசுகளை வழங்குவதற்கு முன் வந்தனர். எனினும் நாம் அதனை நிராகரித்து விட்டோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள 105 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளோடு இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், சிறந்த பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் ஆராய்ந்து சிறந்த அதிகாரிகளைத் தெரிவு செய்தே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
அதற்காக தனியான குழு ஒன்று நியமிக்கப்பட்டு பொலிஸ்மா அதிபர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் பரிந்துரைக்கிணங்கவே அவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தாம் பணிபுரியும் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்களுக்கான நலன்புரி சேவைகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment