பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய தலைவர் மஹிந்த, கோவிட் தொற்றிலிருந்து காப்பாற்றிய தலைவர் கோத்தபாய : தமது அரசியலுக்காக மகா சங்கத்தினரையும், மக்களையும் கொன்று குவித்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - News View

About Us

About Us

Breaking

Sunday, January 16, 2022

பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய தலைவர் மஹிந்த, கோவிட் தொற்றிலிருந்து காப்பாற்றிய தலைவர் கோத்தபாய : தமது அரசியலுக்காக மகா சங்கத்தினரையும், மக்களையும் கொன்று குவித்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஜனவரி 1ஆம் திகதியாகும் போது இந்த நாடு முற்றாக வங்குரோத்தாகும் என எம்.பி. ஒருவர் கூறியிருந்தார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றார்கள். எனினும் அவர்களால் பூர்த்தி செய்ய முடியாத இந்த அதிவேக நெடுஞ்சாலையை கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைத்துள்ளோம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட திறப்பு விழாவில் (15-01-2022 அன்று) ஆளும் தரப்பு பிரதம கொறடாவும், நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அதிவேக நெடுஞ்சாலையை இன்று திறந்து வைப்பதற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் குருநாகல் மாவட்ட மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் இருவரின் வருகை எங்களுக்கு பெரும் பலமாகும்.

2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ, அப்போதைய ஜனாதிபதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக இருந்தபோது, ​​குருநாகல், கலகெதர, ரம்புக்கனை மற்றும் கலேவெல ஆகிய இடங்களில் இந்த அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷவை பழிவாங்கும் நோக்கில் இந்த அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதை நிறுத்தியது.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் வீதிகளை அமைப்பதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்படும் போது, ​​அந்த செலவில் தங்கத்தில் வீதிகளை அமைக்கலாம் என்று கூறப்பட்டது. 25,000 இலட்சம் ரூபாவிற்கு ஒரு கிலோ மீட்டரை நிர்மாணிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டு ஒரு கிலோ மீற்றர் நிர்மாணத்திற்காக 35,000 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. இப்படித்தான் நல்லாட்சி ஏமாற்றியது. ஒரு கிலோ மீற்றர் நிர்மாணிக்க மேலதிகமாக 10,000 இலட்சத்திற்கு வழங்கப்பட்டது. கடவத்தை முதல் மீரிகம வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக மேலதிகமாக 15,000 இலட்சம் ரூபாவிற்கு வழங்கப்பட்டது.

பொய்யான சாட்சிகளை தயாரித்து வழக்குப் பதிவு செய்து, மக்களுக்கு பட்டத்தை காண்பித்து விசாரணை நடத்துவதாக கூறினார்கள். ஆனால் திருட்டுக்கு மட்டும் குறைவிருக்கவில்லை. மத்திய வங்கி மோசடியை விட அதிக மோசடிகளை இந்த நெடுஞ்சாலை நிர்மாணத்தின் போது செய்துள்ளனர். தாங்கள் சிறப்பாக பணியாற்றுவதாக தம்பட்டம் அடித்தாலும் அவர்கள் திறமையற்றவர்கள். அவர்களால் வேலை செய்ய முடியாது.

நெடுஞ்சாலை அமைச்சராக இருந்த நபர் அதிவேக நெடுஞ்சாலைக்கு அனுநாயக்க தேரரை அழைத்துச் சென்று கண்டிக்கு நெடுஞ்சாலை அமைப்பதாக கூறியிருந்தார். சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட காணொளியில் இதனை பார்த்தோம். ஆனால் அப்போது கண்டிக்கு வீதி அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பகுதிக்கு மாண்புமிகு மகாசங்கத்தினரை வரவழைத்து அவர்களுக்குப் பொய்யை கூறினார்கள். அவர்களைப் பற்றி நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையான அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை மஹிந்த ராஜபக்ஷ நாட்டினார். பொத்துஹெர தொடக்கம் ரம்புக்கனை வரையான நிர்மாணப் பணிகள் உள்ளூர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்ச நோக்கு கொள்கை பிரகடனத்தில் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகலிலிருந்து தம்புள்ளை வரையிலான அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் 30 நாட்களுக்குள் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி இன்று எனக்கு பணிப்புரை வழங்கினார். இப்படி நேரடியாக முடிவெடுப்பதுதான் எங்கள் தலைமைத்துவத்தின் விசேடமாகும்.

ஜனாதிபதியை வளைக்க முடியாது. எனவே அவர் மீது எதிர்க்கட்சிகள் சேறு பூசி செயற்திறனற்ற தலைவராக மாற்ற முயற்சிக்கின்றன. ஆனால் அவர்களால் எமது ஜனாதிபதியையும் எமது அரசாங்கத்தையும் கவிழ்க்க முடியாது.

ஜனாதிபதி அவர்களே, நாட்டுக்காக அச்சமின்றி உழைத்து, நாட்டுக்காக சரியான முடிவுகளை எடுங்கள். எமது மகாசங்கத்தினர் உங்களுக்கு துணை நிற்பார்கள்.

பயங்கரவாதிகளிடம் இருந்து இந்த பூமியை காப்பாற்றுவதற்கு தலைமைத்துவத்தை வழங்கியவர் மஹிந்த ராஜபக்ஷ. தடுப்பூசி மூலம் கோவிட் தொற்று நோயிலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றிய தலைவர் கோத்தபாய ராஜபக்ஷ.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக அவர் கோவிட் தொற்றிலிருந்து மக்களைக் காப்பதற்காக பாடுபட்டார். எமது ஜனாதிபதி தடுப்பூசி ஏற்றி மக்களைக் காப்பாற்ற முனைந்தார். தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரான அவர் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வார்.

கொழும்பு 7 இல் கேஸ் வெடிக்காது, குருநாகல், கண்டி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் வெடிக்காது என்று அண்மையில் சொன்னேன். மறுநாள் எனது வெலங்கொல்லை தோட்டத்திற்கு அருகில் சமையல் எரிவாயு வெடித்தது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த ஐஜிபிக்கு உத்தரவிட்டேன்.

இலங்கை வரலாற்றில் தமது அரசியல் நோக்கத்திற்காக மகா சங்கத்தினரையும் அப்பாவி மக்களையும் கொன்று குவித்தவர்களும் இருந்தார்கள். அவர்கள் இன்றும் இருக்கிறார்கள். எனவே, இந்த வெடிப்பு சம்பவங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.

ஆறு அல்லது மூன்று மொழிகளில் பேசும் ஒருவர் இப்போது நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பேஸ்புக்கில் தோன்றுகிறார். திஸாநாயக்கவின் பின்னால் சென்று அவரை ஜனாதிபதியாக்க எமது கிராமத்தில் எவரும் தயாராக இல்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்த 69 இலட்சம் பேர் அவரைப் பாதுகாக்க தயாராக உள்ளனர்.

இந்த நாட்டில் ஊழலற்ற ஆட்சி முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அதனால்தான் அவரை விமர்சிக்கிறார்கள். நீங்கள் சவாலாக இருப்பதால் உள்ளே இருந்தும் வௌியில் இருந்தும் விமர்சிக்கிறார்கள். இது ஒன்றும் நமக்குப் புதிதல்ல. யார் விமர்சித்தாலும் இன்றும் என்றும் உங்களை நாம் பாதுகாப்போம். நிபந்தனையற்ற ஆதரவை உங்களுக்கு வழங்குவோம் என்றார்.

No comments:

Post a Comment