சவுதி அரேபியாவில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலை ஒன்றிலிருந்து சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஒருவரும் அவரது மகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டிலுள்ள செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
இவர்கள் இருவரும் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமலேயே சுமார் மூன்றாண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இளவரசி பாஸ்மா பின் சௌத் சுவிட்சர்லாந்து செல்லத் தயாராகிக் கொண்டிருந்த போது 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
ஆனால் அவர் மீதும் அவருடன் கைது செய்யப்பட்ட அவரது மகள் சுஹௌத் மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்படவில்லை.
சவுதி அரசை விமர்சனம் செய்த இளவரசர்கள் காணாமல் போகும் அல்லது கைது செய்யப்படும் நிகழ்வுகள் அதற்கு முன்னரும் நிகழ்ந்துள்ளன.
சவுதி அரேபியாவில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அங்குள்ள மனித உரிமை விவகாரங்கள் குறித்தும் இளவரசி பாஸ்மா பின் சௌத் தொடர்ந்து குரல் எழுப்பி வந்ததால் அவர் கைது செய்யப்பட்டார் என்று சிலர் கருதுகிறார்கள்.
சவுதி அரேபியாவில் நடக்கும் உரிமை மீறல்கள் குறித்து குரல் எழுப்பி வந்ததே இவர் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று அவரது குடும்பத்தினர் 2020ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தனர் என்று ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு உள்ளதாக கருதப்படும் முன்னாள் பட்டத்து இளவரசர் முகம்மது பின் நய்ஃப் உடன் பாஸ்மா மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் இவரது ஆதரவாளர்கள் சிலர் கூறுகிறார்கள்.
தாம் எந்தவிதமான தவறும் செய்யவில்லை என்றும் தமது உடல்நிலை மோசமடைந்து வருவதால் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று 57 வயதாகும் இளவரசி பாஸ்மா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சவுதி மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆகியோரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
வெளிநாட்டில் எதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்கிறார் என்றும் 2019ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்ட போது எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை.
உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய மருத்துவ நிலைக்கு தலை நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அல் ஹேர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது அவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது என்று பாஸ்மா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட செய்தியை ட்விட்டரில் அறிவித்துள்ள ஏ.எல்.க்யூ.எஸ்.டீ ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ் எனும் அமைப்பு தெரிவிக்கிறது.
அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது.
1953 மற்றும் 1964 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே சவுதி அரேபியாவை ஆட்சி செய்த மன்னர் சௌத்-இன் இளைய மகள் ஆவார் இளவரசி பாஸ்மா பின் சௌத்.
No comments:
Post a Comment