பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் கைகுண்டு மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த வி்டயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பொரளை பொலிஸார் முதலில் விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சகல நபர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இதுவரை 14 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேவாலய வளாகத்தை அண்மித்த பகுதிகளில் இருந்து பெறப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஆதாரங்கள் பதிவு செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அறிவியல், தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் சான்றுகள் மற்றும் தனிப்பட்ட சான்றுகள் மூலம் சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களின் துணையுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விசாரணைகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
தேவாலயத்திற்கு கைக்குண்டை கொண்டு வந்த நபர் அல்லது நபர்கள், சதியின் பின்னணியிலுள்ள நோக்கம் மற்றும் அதற்கு உதவியவர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த நபர்கள் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான உண்மைகள் ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான மேலதிக அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகலரும் கூடிய விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள தேவாலய வளாகத்தில் திருச்சொரூபத்திற்கு அருகிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை கைக்குண்டொன்று மீட்கப்பட்டது.
பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் கெம்பல் மைதானத்தில் அன்றையதினமே குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தெமட்டகொட பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருடன் தொடர்புகளை பேணியுள்ளதுடன், கைக்குண்டை தேவாலய வளாகத்திற்குள் வைத்தமையுடன் தொடர்புபட்டுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் மூன்று சந்தேகநபர்கள், தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment