வெளிநாட்டுப் பிரஜைகளினால் நாடு மீண்டும் பாரிய சுகாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் : இரசாயன உரத்தை தனியார் துறையினர் இறக்குமதி செய்தால் சிறுநீரகநோய் ஏற்படாதா? - அசோக அபேசிங்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 1, 2021

வெளிநாட்டுப் பிரஜைகளினால் நாடு மீண்டும் பாரிய சுகாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் : இரசாயன உரத்தை தனியார் துறையினர் இறக்குமதி செய்தால் சிறுநீரகநோய் ஏற்படாதா? - அசோக அபேசிங்க

(நா.தனுஜா)

கொவிட்-19 இன் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ் தென்னாபிரிக்கா உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளிலும் பரவி வருகின்றது. அதன் விளைவாக ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் வெளிநாட்டவர்கள் தமது நாட்டிற்குள் உள்நுழைவதைத் தடை செய்திருக்கின்றன. இருப்பினும் எமது நாட்டில் டொலர் நெருக்கடி காணப்படுவதனால், வெளிநாட்டுப் பிரஜைகளின் வருகைக்கு இன்னமும் முழுமையாகத் தடை விதிக்கப்படவில்லை. இதனால் எதிர்வரும் காலங்களில் நாடு மீண்டும் பாரிய சுகாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க எச்சரித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வைத்திருக்கும் அனைவரும் தற்போது பேரச்சத்தில் இருக்கின்றார்கள். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்துப் பேசுகின்ற அரசாங்கத்தினால் எரிவாயு சிலிண்டர்களை வீடுகளில் வைத்திருக்கும் மக்களைப் பாதுகாக்க முடியாமல்போனதன் காரணம் என்ன?

கர்தினால் கூறுவதைப் போன்று அப்பாவி மக்களின் இரத்தத்தை சிந்தி, அதன் மூலம் ஆட்சிபீடமேறும்போது அந்தப் பாவச் செயலின் பிரதிபலன்கள் நிச்சயமாகத் தென்படும். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களினால் மரணித்தவர்களைப் பயன்படுத்தி ஆட்சியமைத்த தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழும் அந்தப் பாவச் செயலின் விளைவுகளே வெளிப்படுகின்றன.

தற்போது அரசாங்கத்தின் ஒரு தரப்பினர் மின் ஒழுக்கு காரணமாகவே எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதாகக் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர் இதற்குக் கடந்த அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்கின்றனர். இவ்வாறு சிலிண்டர்கள் வெடிப்பதற்கான உண்மைக் காரணத்தைக் கூறாமல் மக்களை ஏமாற்றும் விதமாகவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் வெளிநாட்டுக் கையிருப்பு பெருமளவால் வீழ்ச்சி கண்டுள்ளது. அதுமாத்திரமன்றி அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளது. இவை தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற நிதி நிர்வாகத்தின் விளைவுகளாகும்.

அதேபோன்று விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் எவையுமின்றி இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தினால் நாடளாவிய ரீதியில் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறெனில், விவசாயம் மற்றும் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு சேதன உரத்தை மாத்திரம் பயன்படுத்தும் கொள்கையை நடைமுறைப்படுத்தப்போவதாக அரசாங்கம் ஏன் கூறியது? இரசாயன உரத்தை தனியார் துறையினர் இறக்குமதி செய்தால் சிறுநீரக நோய்கள் ஏற்படாதா?

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்திருப்பதன் விளைவாக மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு உயர்வடைந்துள்ளது. ஆனால் அரசாங்கம் சமர்ப்பித்திருக்கின்ற அடுத்த ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்டத்தில் அதற்குரிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. மாறாக அரசியல்வாதிகள் பெருமளவான நிதியை மோசடி செய்வதற்கு ஏற்ற வகையிலேயே பெரும்பாலான அமைச்சுக்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் வாழ்க்கைச்செலவு உயர்விற்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை. எனவே சொற்பளவு வருமானத்தைக் கொண்டு தமது குடும்பத்தின் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

அதேவேளை கொவிட்-19 இன் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ் ஆபிரிக்க நாடுகள் உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளிலும் பரவி வருகின்றது. அதன் காரணமாக ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் வெளிநாட்டுப் பிரஜைகள் தமது நாட்டிற்குள் உள்நுழைவதைத் தடை செய்திருக்கின்றன.

இருப்பினும் எமது நாட்டில் டொலர் நெருக்கடி காணப்படுவதனால், வெளிநாட்டுப் பிரஜைகளின் வருகைக்கு இன்னமும் முழுமையாகத் தடை விதிக்கப்படவில்லை. இதனால் எதிர்வரும் காலங்களில் நாடு மீண்டும் பாரிய சுகாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment