(எம்.எப்.எம்.பஸீர்)
தம்மை சி.ஐ.டி. எனும் குற்றப் புலனய்வுத் திணைக்கள அதிகாரிகளாக சித்திரித்து, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைதானவர்களின் உறவினர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்து மோசடி செய்ததாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவ்விருவரிடமும் விசாரணைகள், தடுப்புக் காவலில் இடம்பெறுவதாக சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நேற்று (30) கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகேவுக்கு அறிவித்தனர்.
உஹுமீய - கெபல்லவ பகுதியைச் சேர்ந்த தோனதுவகே தொன் சமன் புத்திக, ஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் ரிஸ்மி மொஹம்மட் ரிஸ்வான் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, பதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்றுக் கொண்ட தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரித்து வருவதாக சி.ரி.ஐ.டி.யினர் மன்றுக்கு அறிவித்தனர்.
இந்நிலையில், நேற்றையதினம் மொஹம்மட் ரிஸ்மி மொஹம்மட் ரிஸ்வான் எனும் சந்தேக நபரை மன்றில் ஆஜர் செய்த சி.ரி.ஐ.டி. அதிகாரிகள், அவர் நீதிவானிடம் இரகசிய வாக்கு மூலம் ஒன்றினை வழங்க எதிர்ப்பார்ப்பதாக கூறினர்.
இரகசிய வாக்கு மூலம் வழங்குவது தொடர்பில் ஒன்றுக்கு இருமுறை சிந்தித்து எதிர்வரும் நாளொன்றில் வாக்கு மூலம் வழங்குவதானால் மன்றில் ஆஜராகுமாறு நீதிவான் சந்தேக நபருக்கு ஆலோசனை வழங்கினார்.
No comments:
Post a Comment