நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது அரசாங்கம் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் பாரிய மோசடி - தரவுகளுடன் விபரித்தார் முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 1, 2021

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது அரசாங்கம் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் பாரிய மோசடி - தரவுகளுடன் விபரித்தார் முஜிபுர் ரஹ்மான்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தொற்றை கட்டுப்படுத்த குறைந்த விலைக்கு கூடிய ஆராேக்கிய தன்மை இருக்கும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாமல் அரசாங்கம் குறைந்த ஆரோக்கிய தன்மை உள்ள சினபோம் தடுப்பூசியை கூடிய விலைக்கு பெற்றுக் கொண்டுள்ளதன் மூலம் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சுகாதார அமைச்சு மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்று அச்சுறுத்தல் நாட்டில் இன்னும் குறையவில்லை. அதனால் இந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த எதிர்காலத்தில் இன்னும் எந்தளவு தொகையை செலவிட வேண்டிவரும் என எமக்கு ஊகிக்க முடியாமல் இருக்கின்றது.

இதுவரைக்கும் 14 ஆயிரத்துக்கும் அதிக மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 5 இலட்சத்துக்கும் அதிக தொற்றாளர்கள் இனம் காணப்பட்டடிருக்கின்றனர். அத்துடன் இந்த காலப்பகுதியில் இனம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 750 என்ற தொகையிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றது. அதனை விட கூடுவதும் இல்லை குறைவதும் இல்லை. கொவிட் மரண வீதங்களை எமது அண்டைய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் ஆராேக்கியமான நிலையில் நாங்கள் இல்லை.

மேலும் கொவிட் கட்டுப்படுத்த தடுப்பூசி கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை. மரணம் அதிகரிக்கும்போதே தடுப்பூசி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் பி.சி.ஆர். மற்றும் என்.டிஜன்களை கொண்டுவரும் வேலைத்திட்டத்தில் பாரிய குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று தடுப்பூசி கொண்டுவரும் நடவடிக்கையிலும் பாரிய மோசடி இடம்பெற்றிருக்கின்றது. தடுப்பூசி கொண்டுவரும் விடயத்தை ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தே மேற்கொள்ளப்பட்டது. அதனால் இதற்கு அமைச்சர்கள் சம்பந்தப்படவில்லை.

ஆரம்பமாக இந்தியாவில் இருந்து 5 இலட்சம் கொவிஷீல்ட் தடுப்பூசி கொண்டுவரப்பட்டது. இதற்காக 5.25 அமெரிக்க டொலர் செலவிடப்பட்டது. மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவரின் தன்னிச்சையான தீர்மானத்துக்கமைய எந்த கேள்வி கோரலும் இல்லாமலேயே இதனை கொண்டுவந்ததால் 2.15 அமெரிக்க டொலருக்கு பெற்றுக்கொள்ள முடிந்தத்தை 5.25 டொலருக்கு பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதனால் 300 மில்லியன் ரூபாவரை அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டிருக்கின்றது. அதேபோன்று ஸ்புட்னிக் தடுப்பூசி கொண்டுவருவதிலும் அரசாங்கத்துக்கு 12 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் சினோபார்ம் தடுப்பூசியை அரசாங்கம் 15 டொரலருக்கே பெறப்படுகின்றது. பங்களாதேஷ் போன்ற நாடுகள் சினோபாம் தடுப்பூசியை 5 முதல் 10 டொலருக்கு பெறும்போது நாங்கள் ஏன் 15 டொலருக்கு பெற வேண்டும்.

உலகில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பைஸர், மொடோனா, அஸ்ட்ரா செனிகா போன்ற தடுப்பூசிகள் குறைந்த விலைக்கு இருக்கும் போது ஆராேக்கிய தன்மையில் குறைந்த, கேள்வி கோரல் குறைந்த சினபோம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

ஏன் குறைந்த விலைக்கு ஆராேக்கிய தன்மை கூடிய தடுப்பூசி இருக்கும்போது ஆராேக்கிய தன்மை குறைந்த தடுப்பூசியை அதிக விலைக்கு பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்ததால் பாரிய மோசடி இடம்பெற்றிருக்கின்றது.

கேள்விகோரல் எதுவும் இல்லாமல் ஜனாதிபதியின் செயலாளரின் தன்னிச்சையான தீர்மானத்தினால் இந்த நட்டம் ஏற்பட்டிருக்கின்றது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது அரசாங்கம் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் பாரிய மோசடி இடம்பெற்றிருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment