வெகுசன ஊடக அமைச்சால் ஊடகவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்திய அசிதிசி காப்புறுதித் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதிப் பத்திரங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை (02) மு.ப 10.00 மணிக்கு அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்படும்.
அசிதிசி ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித் திட்டத்தின் முதலாவது சுற்றுக்காக 3000 ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அனைத்து ஊடக நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய வகையில் 98 ஊடகவியலாளர்களுக்கு நாளையதினம் காப்புறுதிப் பத்திரம் வழங்கப்படும்.
'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' அரச கொள்கைப் பிரகடனத்தின் மூலம் வெகுசன ஊடகத்துறையின் விருத்திக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முக்கிய முன்மொழிவாக, ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தல் வெகுசன ஊடக அமைச்சால் 'அசிதிசி திடீர் விபத்து மற்றும் மருத்துவக் காப்புறுதி முன்மொழிவு முறை' எனும் பெயரில் திட்டமிடப்பட்டுள்ளது.
பாதிப்பின்றியதும், ஒழுக்கவிழுமியத்துடன் கூடியதுமான ஊடகப் பாவனைப் பொறுப்புடன், பொதுமக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதில் பாரிய பணிகளை ஆற்றும் ஊடகவியலாளர்களின் தொழில் ரீதியான அர்ப்பணிப்புக்களை பாராட்டி அவர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அசிதிசி காப்புறுதித் திட்டத்தின் நோக்கமாகும்.
அரச தகவல் திணைக்களம் வழங்கியுள்ள ஊடகவியலாளர் அடையாள அட்டையைக் கொண்ட, ஊடக நிறுவனத்தால் காப்புறுதி பெற்றுக் கொள்ளாத ஊடகவியலாளர்களுக்கு இதற்காக விண்ணப்பிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.
அசிதிசி காப்புறுதித் திட்டத்திற்கமைய வதிவிட மருத்துவச் சிகிச்சை, வெளிநோயாளர் சிகிச்சை, மிகவும் தீவிர நோய்களுக்கான சிகிச்சை, செவிப்புல உபகரணம் மற்றும் மூக்குக் கண்ணாடிக் கொள்வனவுக்கான நிதி வசதிகள் வழங்கப்படும்.
வெகுசன ஊடக அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் அசிதிசி காப்புறுதி வேலைத்திட்டத்திற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களிடமிருந்து எந்தவொரு அறவீடும் மேற்கொள்ளப்படமாட்டாது.
அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனத்தின் பிரதிநிதிகள் நாளையதினம் காப்புறுதிப் பத்திர வழங்கல் நிகழ்வில் கலந்து கொள்வர்.
No comments:
Post a Comment