(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சர் சுதத் அஸ்மடல, சம்பிக்கவின் சாரதி திலும் குமார ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு நாளை (2) வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராஜகிரிய பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம் விபத்திற்குள்ளானதில் சந்தீப் சம்பத் எனும் இளைஞர் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில், சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை தொடர்பிலான வழக்கே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ர்வரி 28 ஆம் திகதி வெலிக்கடை பொலிச் பிரிவில் டப்ளியூ.பி.கே.பி. 4575 எனும் ஜீப் வண்டியின் சாரதியாக செயற்பட்டு அபாயகரமாக வாகனம் செலுத்தி ஒருவரை படுகாயத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அந்த விபத்து இடம்பெற்ற காலப்பகுதியில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட தற்போது பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சர் சுதத் அஸ்மடல, சம்பிக்கவின் சாரதியாக செயற்பட்ட திலும் துஷித குமார ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
16 குற்றச்சாட்டுக்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், சாட்சிகளை உருவாக்கியமை, சாட்சிகளை அழித்தமை, வாகன விபத்தை ஏற்படுத்திய சம்பிக்க ரணவக்க என்பவருக்கு சட்ட ரீதியிலான தண்டனையில் இருந்து தப்பிக்க நீதிவான் நீதிமன்றுக்கு பொய்யான அறிக்கையை சமர்ப்பித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று (30) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது முதல் பிரதிவாதி சம்பிக்க ரணவக்க சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, 3 ஆம் பிரதிவாதி உதவி பொலிஸ் அத்தியட்சர் அஸ்மடல சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆகியோர் மன்றில் அடிப்படை ஆட்சேபனையை முன் வைத்தனர்.
தமது சேவை பெறுநர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் 16 குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள போதும், இதற்கு முன்னர் நீதிவான் நீதிமன்றில் இந்த சம்பவத்தை மையப்படுத்திய வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு அவ்வழக்கில் 2 ஆம் பிரதிவாதி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
அவ்வாறு அளிக்கப்பட்ட அந்த தண்டனை தற்போதும் அமுலில் இருக்கும் நிலையில், அதே சம்பவத்தை மையப்படுத்தி மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
நீதிவான் நீதிமன்ற தீர்ப்பு இன்னும் வலுவிழக்கச் செய்யப்படாத நிலையில், மேலும் இருவருக்கு எதிராக அதே வாகனத்தில் அதே விபத்தை ஏற்படுத்தியதாக கூறி வழக்குத் தொடுப்பதற்கு அதிகாரமில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் 2 ஆம் பிரதிவாதியான சாரதி திலும் துஷித்த குமார சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி, கடந்த 2020 ஜனவரி 29 ஆம் திகதி தனது சேவைப் பெறுநர் நீதிவான் நீதிமன்றுக்கு குற்றவியல் சட்டக் கோவையின் 127 ஆம் அத்தியாயத்தின் கீழ் இரகசிய வாக்கு மூலம் வழங்கியுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி அடிப்படை ஆட்சேபனைகளை முன் வைப்பதை தவிர்ப்பதாக கூறினார்.
இந்நிலையில் பிரதிவாதிகள் தரப்பின் ஆட்சேபனைக்கு நாளை (2) பதிலளிப்பதாக மன்றில் ஆஜராகிய வழக்குத் தொடுநர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் அறிவித்தார்.
அதன் பின்னர் அடிப்படை ஆட்சேபனம் குறித்த நீதிமன்றின் தீர்மனத்தை சட்டமா அதிபர் தரப்பின் நிலைப்பாட்டையும் கேட்ட பின்னர் அறிவிப்பதாக குறிப்பிட்ட நீதிபதி தமித் தொட்டவத்த, சாட்சி விசாரணைகளை நாளை 2 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்து சாட்சியாளர்களுக்கு அறிவித்தல் அனுப்பவும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment