முல்லைத்தீவு கடலில் நீராடிக் கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த மூவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதோடு, தேடப்பட்டு வந்த ஏனைய இருவரும் இன்று (06) சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் இருந்து நேற்றையதினம் (05) முல்லைத்தீவு சென்ற நான்கு பேர் முல்லைத்தீவு கடலில் நீராடிய போது அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட நிலையில் மூவர் காணாமல் போயினர்.
அவர்களை கடலில் தேடியும் காணாமையால் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிசார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது நேற்று (05) மாலை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன், ஏனைய இருவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது. இன்று (06) ஏனைய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன் தர்சன் (26), மதவுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்தவர்களான சிவலிங்கம் சகிலன் (26), மனோகரன் தனுஷன் (27) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்களாவர்.
அவர்களுடன் கூடச் சென்ற பெண் முல்லைத்தீவு பொலிசாரால் அழைத்து செல்லப்பட்டு அவரிடம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா விசேட நிருபர்
No comments:
Post a Comment