அரசியல் நோக்கத்திற்காக அனைத்தையும் எதிர்த்தால் முன்னேற்றத்தை அடைய முடியாது - சம்பந்தன் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 18, 2021

அரசியல் நோக்கத்திற்காக அனைத்தையும் எதிர்த்தால் முன்னேற்றத்தை அடைய முடியாது - சம்பந்தன்

(ஆர்.யசி)

உள்ளூராட்சி சபையில் அல்லது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். அனைத்து விடயங்களிலும் அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டால் எதனையுமே எம்மால் நிறைவேற்ற முடியாமலும், அமுல்படுத்த முடியாமலும், முன்னேற்றத்தை அடைய முடியாமலும் போய்விடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த புதன்கிழமை சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில், வரவு செலவுத் திட்டத்தைக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் எதிர்த்திருந்தனர். எனினும் வரவு செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் நிறைவேறியதுடன், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் மேயராகத் தொடர்ந்து பதவி வகிக்கவும் வாய்ப்புக் கிட்டியது.

இவ்வாறானதொரு நிலையில், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எடுத்த முடிவு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் கூறுகையில்,

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சமர்ப்பித்த 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்து வாக்களிப்பது தொடர்பில் எனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்தத் தீர்மானம் யாழ்ப்பாணத்தில் இருந்தவர்களால் எடுக்கப்பட்டது.

ஆனால், எனது பொதுவான கருத்து என்னவெனில், உள்ளூராட்சி சபைக்கோ அல்லது மாகாண சபைக்கோ அல்லது பாராளுமன்றத்துக்கோ தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும். அரசியலுக்கு அப்பால் மக்களுக்கு நன்மையளிக்கும் விதத்தில் செயற்படுவதே அவசியமானதாகும். அதனை அடிப்படையாகக் கொண்டு சில முக்கியமான தீர்மானங்களை அவசியமான நேரங்களில் எடுக்கலாம் என்பதே எனது நிலைப்பாடு.

சகல விடயங்களிலும் அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டால் எதனையுமே எம்மால் நிறைவேற்ற முடியாமல், அமுல்படுத்த முடியாமல், ஒரு முன்னேற்றத்தை அடைய முடியாமல் போய்விடும். அதனைச் சகலரும் மனதில் வைத்துக்கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment