டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது நெருப்பு குழியில் விழுவதற்கு இணையானது - வாசுதேவ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Monday, December 20, 2021

டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது நெருப்பு குழியில் விழுவதற்கு இணையானது - வாசுதேவ நாணயக்கார

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் தற்போது பெரும் டொலர் நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினை நாடப்போவதில்லை என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ வாக்குறுதியளித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றால் அது தேசிய மட்டத்தில் மாறுபட்ட பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும். பொருளாதார பாதிப்பை சீர் செய்வதற்கு மாற்றுத் திட்டங்கள் செயற்படுத்தப்படும் என நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பாரிய டொலர் நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளோம் என்பதை பகிரங்கமாக குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கப் பெற வேண்டுமாயின் மக்கள் மத்தியில் உண்மை நிலைவரத்தை பகிரங்கமாக குறிப்பிட வேண்டும்.

டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது நெருப்பு குழியில் விழுவதற்கு இணையான செயற்பாடாகும். தற்போதைய நெருக்கடியை தீவிரப்படுத்துவதற்காகவே சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு எதிர்த்தரப்பினர் அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற வேண்டுமாயின் அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டாயம் அடிபணிய நேரிடும். அது தேசிய மட்டத்தில் மாறுபட்ட பிரச்சினைகளை தோற்றுவிக்கும். அதனையே எதிர்த்தரப்பினர் தற்போது எதிர்பார்க்கிறார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது குறித்து அரசாங்கத்திடம் இரு வேறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுகிறது. நாணய நிதியத்தின் உதவியை தற்போதைய நிலையில் நாடுவதில்லை என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியை சீர் செய்வதற்கு மாற்று திட்டங்கள் செயற்படுத்தப்படும்.

ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்விற்கு பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படும். எனது அமைச்சின் விடயதானங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. ஒரு சில முக்கிய அமைச்சு பதவிகளில் மாத்திரம் மீண்டும் மாற்றம் ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment