(எம்.மனோசித்ரா)
இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளமையை பொய்யாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. எதிர்வரும் ஜனவரியில் 500 மில்லியன் டொலர்களையும், ஜூலை மாதத்தில் 1 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை அரசாங்கம் மீளச் செலுத்த வேண்டியுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என்பதை சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளதை பொய்யெனக் கூறுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
நாட்டின் தற்போதைய டொலர் கையிருப்பு மிகவும் முக்கியத்துவமுடையதாகும். காரணம் எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதியாகும் போது 500 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு 1.5 பில்லியன் டொலராகக் குறைவடைந்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே ஜனவரியில் 500 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடனையும் செலுத்த வேண்டியுள்ளது.
இதேவேளை எரிபொருள், மருந்து உள்ளிட்ட மேலும் பல அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துள்ளமையின் காரணமாகவே வெளிநாட்டு கடன்களையும் செலுத்த முடியாத நிலையிலுள்ளது என்பதையும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கைக்கு அந்நிய செலாவணி வருமானம் கிடைப்பதாகத் தெரியவில்லை என்றும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதமளவில் மேலும் 1 பில்லியன் ரூபா வெளிநாட்டு கடனை செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டே ஆரம்பத்திலேயே சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்தினோம். ஐக்கிய தேசிய கட்சி தலைவர் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். எனினும் அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை.
கொவிட் தொற்றின் காரணமாக அந்நிய செலாவணி இருப்பு குறைவடையவில்லை. தவறான நிதி முகாமைத்துவமே இதற்கான காரணமாகும். அரசாங்கம் கோடீஸ்வரர்களுக்கு வரி சலுகைகளை வழங்கியது. டொலர் இருப்பு குறைவடைய ஆரம்பித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இலங்கைக்கு பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாது என தெரிவித்து எந்த நாடும் கடன் வழங்க முன்வரவில்லை.
அதேபோன்று முதலீடுகளுக்கும் முன்வரவில்லை. இதனால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடு பின்னடைவை சந்திப்பிதற்கு இதுவே பிரதான காரணியாகும். பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை இப்போதே உணரத் தொடங்கியுள்ளோம்.
தற்போது எந்த நாடும் கடன் வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு பொருட்களை வழங்குவதில்லை. இதன் காரணமாக பால்மா வருவதில்லை. மருந்தும் இல்லை. எரிபொருள் இறக்குமதிக்கு பணம் இல்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஜனவரியின் பின்னர் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் உள்ளது.
நாடு இவ்வாறான நிலையில் எவ்வாறு முன்னோக்கி பயணிக்க முடியும்? ஒருபுறம் எரிபொருளை இறக்குமதி செய்ய வழியில்லை என்று கூறுகின்றனர். மறுபுறம் நிலக்கரியையும் கொண்டு வரமுடியாதெனக் கூறுகின்றனர்.
நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுமானால் மின் உற்பத்தி பாதிக்கப்படும். நாட்டின் மின் தேவையில் பெருமளவு மின்சாரம் நுரைச்சாலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
குழந்தைகளுக்கு பால் வழங்க முடியாத நிலையில், எதிர்காலத்தில் மந்த போசனை ஏற்பட வாய்ப்புள்ளது. மறுபுறம் உரப் பிரச்சினையின் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மரக்கரிகளின் விலைகளும் உயர்வடைந்துள்ளன.
இரசாயன உரப்பாவனைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கினாலும், தற்போது யுரியா உரத்தின் விலை 12000 ரூபா வரை அதிகரித்துள்ளது. அவ்வாறெனில் விவசாயிகளால் எவ்வாறு விவசாயத்தை மேற்கொள்ள முடியும்?
அடுத்த ஆண்டு மிகவும் முக்கியத்துவமுடைய வருடமாகும். வாகனங்கள் இருந்தும் எரிபொருள் இல்லாத நிலையும், மின் உபகரணங்கள் இருந்தும் மின்சாரம் இல்லாத நிலையும் ஏற்படக் கூடிய நாடாக இலங்கை மாறுவதை தடுக்க வேண்டும்.
தேசிய சொத்துக்களை அதன் மூலமாக டொலரைப் பெறும் பொருளாதாரக் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது. இவ்வாறான நெருக்கடியான நிலைமைக்கு மத்தியிலும் நிதி அமைச்சர் நாட்டை விட்டுச் சென்றுள்ளார். நாட்டில் தற்போதுள்ள டொலர் நெருக்கடிக்கான தீர்வினை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ள இலங்கையில் உள்ள ஒரேயொரு தலைவரான ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே வழங்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment