(இராஜதுரை ஹஷான்)
நல்லாட்சி அரசாங்கத்திடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்தோம். இந்த ஆட்சியில் வீட்டை கூட பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் புத்தாண்டினை சிறப்பாக கொண்டாட முடியாத நெருக்கடி நிலையை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது. இவர்கள் மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்கும் தலைவர்களாயின் இந்நேரம் பதவி துறந்திருப்பார்கள் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கம் தேசியத்திற்கு எதிராக செயற்பட்டது. தவறான தீர்மானங்களினால் புத்தசாசனத்தின் இருப்பு கேள்விக்குள்ளானது. அரசியல் காரணிகளினால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. அதன் தாக்கத்தை சாதாரண மக்களே எதிர்கொண்டார்கள்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம். நல்லாட்சி அரசாங்கம் எவ்வாறு மக்களாணைக்கு முரணாக செயற்பட்டதை போன்று தற்போதைய அரசாங்கமும் செயற்படுகிறது.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் வீட்டின் பாதுகாப்பை கூட உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஊடகங்களை புறக்கணித்து செயற்படுகின்றமை அவர்களின் அலட்சிய போக்கினை வெளிப்படுத்தியுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவரை பதவியில் இருந்து நீக்கக்கூட அரசாங்கத்திற்கு தற்துணிவு கிடையாது. அனைத்து துறைகளிலும் ஊழல் மோசடி அதிகரித்துள்ளன. சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்புச் சம்பவமும் ஒரு மோசடியாக இருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்த நிலையில் உள்ளன. காசு கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
புத்தாண்டினை மகிழ்வுடன் கொண்டாட முடியாத துரதிஷ்ட நிலையை ஆட்சியாளர்கள் தோற்றுவித்துள்ளார்கள். மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்கும் அரச தலைவர்களாயில் இவர்கள் இந்நேரம் பதவி துறந்திருப்பார்கள் என்றார்.
No comments:
Post a Comment