நஷ்டஈடு கோரும் வழக்குகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது - நீதிமன்றத்தில் பைசர் முஸ்தபா வாதம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 1, 2021

நஷ்டஈடு கோரும் வழக்குகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது - நீதிமன்றத்தில் பைசர் முஸ்தபா வாதம்

(எம்.எப்.எம்.பஸீர்)

போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையை மையப்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் 107 பேர் 900 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி தாக்கல் செய்துள்ள வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா வாதங்களை முன் வைத்துள்ளார்.

குறித்த வழக்குகளை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு அழைத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் மன்றில் வாதங்களை முன் வைக்கும் போதே ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்தார்.

போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையை மையப்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக, பாதிக்கப்பட்ட 289 பேர் இரு மாவட்ட நீதிமன்றங்களில் நட்ட ஈடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.

கொழும்பு மற்றும் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவை ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ள நட்ட ஈட்டின் மொத்த பெறுமதி 1,250 மில்லியன் ரூபாவாகும்.

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கட்டுவபிட்டிய தேவாலயம் மீது நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 182 பேர் நீர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நட்ட ஈடு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 107 பேர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்த அனைத்து நட்ட ஈடு கோரும் வழக்குகளிலும் பிரதிவாதிகளாக, முன்னள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய உளவுச் சேவையும் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகள்க பெயரிடப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா, சட்டத்தரணி சந்துன் நாகஹவத்த உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் இந்த வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் பிரதிவாதி தரப்பு நகர்த்தல் பத்திரம் ஊடாக நேற்றுமுன்தினம் (29) விசாரணைக்கு எடுக்கப்பட்டன. இதன்போது பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மன்றில் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.

No comments:

Post a Comment