(எம்.மனோசித்ரா)
'ஒமிக்ரோன்' பிறழ்வு நாட்டில் பரவியுள்ளதா என்பது குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எந்த பிறழ்வு நாட்டுக்குள் நுழைந்தாலும் சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் தொற்று தீவிரமடையாமல் தவிர்க்க முடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தென் ஆபிரிக்காவில் 'ஒமிக்ரோன்' என்ற புதிய பிறழ்வு இனங்காணப்பட்டதையடுத்து ஏனைய நாடுகளும் பரிசோதனைகளை முன்னெடுத்தன. இதன் போது சில நாடுகளில் இந்த பிறழ்வு இனங்காணப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த பிறழ்வு காணப்படுகிறதா என்பதை இனங்காண்பதற்கு உள்ள ஒரேயொரு வழி, தொற்று அறிகுறி காணப்படுபவர்களது மாதிரிகளைப் பெற்று பிறழ்வுகளை இனங்காண்பதற்கான பரிசோதனைகளை முன்னெடுப்பதாகும்.
எனினும் அது நடைமுறையில் சாத்தியமற்றது. எனவே எழுமாற்றாக பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டே பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எவ்வாறிருப்பினும் இலங்கையில் இந்த வைரஸ் பாரியளவில் பரவுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும். காரணம் தென் ஆபிரிக்காவிலிருந்து பெருமளவான மக்கள் இலங்கைக்கு வருவதில்லை. எவ்வாறிருப்பினும் பிரித்தானியாவில் இந்த பிறழ்வு இனங்காணப்பட்டுள்ளது. இந்த நாடுகளிலிருந்து கணிசமானளவானோர் இலங்கை வருகின்றனர். எனவேதான் பரிசோதனைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும் எந்த பிறழ்வு நாட்டுக்குள் நுழைந்தாலும், சுகாதார விதிமுறையாகப் பின்பற்றாவிட்டால் மாத்திரமே அதன் பரவல் தீவிரமடையும். எனவே நாம் அனைவரும் சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினால், இந்த பிறழ்வு நாட்டுக்குள் நுழைந்தாலும் பரவாமல் தடுக்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment