அரசாங்கத்தின் தீர்மானத்துக்கெதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் : இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேவை சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கெதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் : இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேவை சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடெட்' என்ற துணை நிறுவனத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளமைக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேவை சங்கத்தின் தலைவர் அசோக ரன்வெல தெரிவித்தார்.

ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடெட் துணை நிறுவனம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2002 மற்றும் 2003ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்திய நிறுவனத்திற்கு வழங்கியது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டமடைவதற்கு இதுவும் ஒரு காரணியாக காணப்படுகிறது.

திருகோணமலை எண்ணெய் குதங்களில் உள்ள 61 தாங்கிகளை அபிவிருத்தி செய்யவதற்கு வலுசக்தி அமைச்சு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையும், இந்திய நிறுவனத்தையும் ஒன்றினைத்து 'ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தத்தில் இரகசியமான முறையில் பிறிதொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தில் உள்ள பாவிக்க முடியாத எண்ணெய் தாங்கிகளை தேசிய மட்டத்தில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு எதிராக எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம்.

யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் இரகசியமான முறையில் கைச்சாத்திடப்பட்டது. யுகதனவி மின் நிலைய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை தடை செய்யுமாறு கோரி பல்வேறு தரப்பினர் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அதேபோல் இந்நிறுவன ஸ்தாபிப்பிற்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியுமா என்பது குறித்து ஆராயவுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment