பிரதமர் மஹிந்த விரும்பினாலும் நாட்டு மக்கள் அனுமதி வழங்கமாட்டார்கள் : பங்காளிக் கட்சியினர்களுக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை செயற்படுத்துவோம் - திலும் அமுனுகம - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

பிரதமர் மஹிந்த விரும்பினாலும் நாட்டு மக்கள் அனுமதி வழங்கமாட்டார்கள் : பங்காளிக் கட்சியினர்களுக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை செயற்படுத்துவோம் - திலும் அமுனுகம

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெறவிரும்பினாலும் நாட்டு மக்கள் அதற்கு அனுமதி வழங்கமாட்டார்கள். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் கருத்துக்களுக்கு கவனம் செலுத்திய காரணத்தினால் அரசாங்கம் பல நெருக்கடிகளை தற்போது எதிர்கொண்டுள்ளது. நட்டமடைந்துள்ள அரச நிறுவனங்கள் குறித்து எதிர்வரும் காலங்களில் கடுமையான தீர்மானங்கள் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து துறை இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்திட்டங்களை துறைசார் அடிப்படையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொவிட் தாக்கத்தின் பின்னரான பொருளாதார நிலைமைக்கு மத்தியில் மக்களின் வாழ்க்கை தரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். அவர் விரும்பினாலும் மக்கள் அதற்கு அனுமதி வழங்கப் போவதில்லை.அரசாங்கத்தின் பதவிக் காலம் நிறைவு பெறும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி வகிப்பார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியினர் அமைச்சரவை கூட்டுப் பொறுப்பிற்கமைய செயற்படுகிறார்களா என்பது சந்தேகத்திற்குரியது. பங்காளி கட்சிகளின் தீர்மானங்களுக்கு கவனம் செலுத்திய காரணத்தினால் அரசாங்கம் தற்போது பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் இந்திய நிறுவனத்துடன் கைச்சாத்திட தீர்மானித்திருந்த வேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியினர் தொழிற்சங்கங்களடன் ஒன்றினைந்து அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்கள்.

பங்காளி கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து கிழக்கு முனையத்தை அரசாங்கமே அபிவிருத்தி செய்ய தீர்மானித்தது. ஆனால் தற்போது அதனை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்திடம் நிதியில்லை. அபிவிருத்தி செய்யாத காரணத்தினால் எதிர்பார்த்த இலக்கினையும் அடைய முடியவில்லை.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியினர் இனிவரும் காலங்களிலாவது கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு முரணாக செயற்பட்டால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை குறித்து கவனம் செலுத்தாமல் கடுமையான தீர்மானங்களை எதிர்வரும் காலங்களில் செயற்படுத்துவோம்.

நட்டமடைந்துள்ள அரச நிறுவனங்கள் தொடர்பில் இனிவரும் காலங்களில் கடுமையான தீர்மானங்கள் முன்னெடுக்கப்படும். தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பெரும்பாலான அரச நிறுவனங்கள் நட்டமடைகின்றன. அனைத்து தரப்பினரது கருத்துக்களுக்கும் கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் கொள்கைக்கு பிரதான தடையாக காணப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment