இலங்கைக்கு கொண்டுவரப்படுகிறது இங்கிலாந்து மகாராணியாரின் செய்தியை தாங்கிய கோல் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 26, 2021

இலங்கைக்கு கொண்டுவரப்படுகிறது இங்கிலாந்து மகாராணியாரின் செய்தியை தாங்கிய கோல்

(நெவில் அன்தனி)

இங்கிலாந்தின் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவை முன்னிட்டு மகாராணியாரின் செய்தியை தாங்கிய கோல் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

மகாராணியார் செய்தி தாங்கிய இந்தக் கோல் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி பிரபல தேயிலைத் தோட்டங்களில் ஒன்றான பொகவந்தலாவை. கேர்க்கஸ்வோல்ட் தோட்டத் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் மகாராணியாரின் செய்தி தாங்கிய கோல், தோட்டத் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

தேசிய ஒலிம்பிக் குழுவும் இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்கமும் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.

ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் கேர்க்கஸ்வோல்ட் உட்பட தேயிலைத் தோட்டங்கள் பிரித்தானிய நிறுவனங்களுக்கு சொந்தமாக இருந்ததுடன் அத் தோட்டங்கள் வெள்ளைக்கார துரைமார்களால் நிருவகிக்கப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் பொதுநலவாய அமைப்பு நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் மகாராணியாரின் செய்தி தாங்கிய கோல், மாலைதீவுகளிலிருந்து ஜனவரி மாதம் 3ஆம் திகதி கட்டுநாயக்கவுக்கு விமானம் மூலம் கொண்டுவரப்படவுள்ளது.

அங்கிருந்து பிரபல மெய்வல்லுநர்கள் சகிதம் சுதந்திர சதுக்கத்துக்கு கொண்டுவரப்படும் மகாராணியார் கோல் பின்னர் ஒலிம்பிக் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அன்றைய தினம் மகாராணியார் கோலை, அலரி மாளிகைக்குக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அதற்கான உத்தியோகபூர்வ தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியத்துடன் ஒலிம்பிக் குழுவின் சந்தைப்படுத்தல் மற்றும் ஊடக முகாமையாளர் கோபிநாத் சிவராஜா, உபேஷ்கா அஞ்சலி, ஊடகப்பிரிவு தலைமை அதிகாரி எஸ். ஆர். பத்திரவித்தான ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

பிரித்தாணிய தூதரகம், பிரித்தானிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு ஜனவரி 3ஆம் திகதி கொண்டுசெல்லப்படும் மகாராணியார் கோல், ஜனவரி 4ஆம் திகதி கண்டி நோக்கி கொண்டு செல்லப்படும்.

அங்கு பிரித்தானியரால் நிர்மாணிக்கப்பட்ட விக்டோரியா நீர்த் தேக்கம், ரனபிம றோயல் கல்லூரி ஆகியவற்றுக்கும் பின்னர் ஹந்தானையிலுள்ள இலங்கை தேயிலை நூதனசாலைக்கும் மகாராணியார் கோல் எடுத்துச் செல்லப்படும்.

ஜனவரி 5ஆம் திகதியன்று மகாராணியார் கோல், பொகவந்தலாவை, கேர்க்கஸ்வோல்ட் தோட்டத் தொழிற்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு கோலின் முக்கியத்தும் குறித்து தோட்ட அதிகாரிகளுக்கும் ஏனையவர்களுக்கும் விளக்கப்படும். கேர்க்கஸ்வோல்ட் தமிழ் மொழியில் லெட்சுமி தோட்டம் என அழைக்கப்படுகனின்றது.

கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்திலிருந்து கொழும்புக்கு கொண்டு வரப்படும் மகாராணியார் கோல் விளையாட்டுத்துறை அமைச்சினால் பொறுப்பேற்கப்பட்டு மறுநாள் பங்களாதேஷுக்கு அனுப்பிவைக்கப்படும்.

மகாராணியார் கோல் 2014 இல் கண்டிக்கும், 2018 இல் காலிக்கும் வைஸ்ரோய் ரயில் வண்டி மூலம் ஊடகவியலாளர்கள் சகிதம் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment