பால் மாவின் விலை மேலும் அதிகரிக்கும் : தட்டுப்பாடு பெப்ரவரி வரை நீடிக்கும் - இறக்குமதியாளர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 26, 2021

பால் மாவின் விலை மேலும் அதிகரிக்கும் : தட்டுப்பாடு பெப்ரவரி வரை நீடிக்கும் - இறக்குமதியாளர்கள் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

சந்தையில் தற்போது நிலவும் பால்மா தட்டுப்பாடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை நீடிக்கும். உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே தேசிய மட்டத்தில் பால்மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

பால்மா தட்டுப்பாடு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இறக்குமதி செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியாத அளவிற்கு டொலர் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் பால்மா இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளோம்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து பால்மாவின் விலை அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர் சங்கத்தினர் நிர்ணயித்த விலையினை நடைமுறைப்படுத்த அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.

ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 350 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 140 ரூபாவினாலும் அதிகரிக்குமாறு வலியுறுத்தினோம். ஆனால் ஒரு கிலோ கிராம் பால்மா பெக்கெட்டின் விலை 250 ரூபாவினாலும், 400 கிலோ கிராம் பால்மா பெக்கெட்டின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது. இந்த விலை அதிகரிப்பிற்கு திருப்தியளிக்கவில்லை.

புதிய விலைக்கு அமைய விற்பனையில் ஈடுபடும் போது ஒரு கிலோ கிராம் பால்மா பெககெட்டின் ஊடாக 80 ரூபாவிலும், 400 கிலோ கிராம் பால்மா பெக்கெட்டின் ஊடாக 32 ரூபாவிலும் நட்டமடைகிறோம். பால்மா இறக்குமதியின் போது வரி குறைப்பு செய்வதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.

சந்தையில் தற்போது நிலவும் பால்மா தட்டுப்பாடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை தொடரும். உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை நிதியமைச்சிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment