பெரியநீலாவணை அதிரடிப்படை முகாம் அமைந்துள்ள காணி விடுவிக்கப்பட வேண்டும் : கல்முனை மாநகர சபையில் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 1, 2021

பெரியநீலாவணை அதிரடிப்படை முகாம் அமைந்துள்ள காணி விடுவிக்கப்பட வேண்டும் : கல்முனை மாநகர சபையில் தீர்மானம்

பெரிய நீலாவணையில் கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகின்ற விசேட அதிரடிப்படை முகாம், அங்கிருந்து அகற்றப்பட்டு, அக்காணி மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கல்முனை மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை மாதாந்த பொதுச்சபை அமர்வு திங்கட்கிழமை (29) மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோதே இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான பிரேரணையை முதல்வர் ஏ.எம்.றகீப் முன்மொழிந்து உரையாற்றுகையில், கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் துறைநீலாவணைக்கு செல்கின்ற பெரிய நீலாவணை சந்தியின் கிழக்கு புறமாக விசேட அதிரடிப்படை முகாம் இயங்கி வருகின்ற இடமானது, மருதமுனை, பாண்டிருப்பு மற்றும் பெரிய நீலாவணை பிரதேசங்களை உள்ளடக்கிய முன்னைய கரைவாகு (கல்முனை) வடக்கு கிராம சபைக் காரியாலயம் இயங்கி வந்த இடமாகும்.

1987ஆம் ஆண்டளவில் கல்முனை பட்டின சபையுடன் கரைவாகு வடக்கு கிராம சபையும் இணைக்கப்பட்டே கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது. பின்னர் கல்முனை பிரதேச சபையானது நகர சபையாகவும் மாநகர சபையாகவும் தரமுயர்த்தப்பட்டு இன்றளவில் இயங்கி வருகிறது.

இதன்படி குறித்த இடமானது கல்முனை மாநகர சபைக்குரிய சொத்து என்பதனால், அந்த இடத்தை மாநகர சபையின் தேவைக்கு பயன்படுத்தும் நோக்குடன் மீட்க வேண்டியிருக்கிறது. ஆகையினால் அந்த இடத்தில் இயங்கி வருகின்ற விசேட அதிரடிப்படை முகாம் அங்கிருந்து அகற்றப்பட்டு, அதனை வேறொரு இடத்தில் அமைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

(கல்முனை விசேட நிருபர்)

No comments:

Post a Comment