பூமிக்கடியில் உள்ள எரிபொருளை அகழ்ந்து நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த கட்சி பேதமின்றி அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமென பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பில நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வலுசக்தி அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2050ஆம் ஆண்டில் எரிபொருள் யுகம் முற்றுபெறுமென தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் நமது நாட்டில் பூமிக்கு அடியில் உள்ள எரிபொருளை அகழ்ந்து எமது பொருளாதாரத்திற்கு பலம் சேர்ப்பதற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்குவது அவசியம்.
அது தொடர்பில் எந்த கட்சி பேதமுமின்றி அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நான் தயாராக உள்ளேன். இது எமக்கான சிறந்த காலமாகும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது முக்கியமாகும்.
அந்த எண்ணெய் அகழ்வு தொடர்பில் நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தேன். எனினும் அவர்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
கடந்த காலங்களில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெல்ல முடியாத காரணத்தினாலேயே நாம் தற்போது பல்வேறு சவால்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளதென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment