வடக்கில் முன்னெடுக்கப்படும் சட்ட ரீதியான காணி அளவீடுகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தின், அபிவிருத்தி, பொருளாதார, சமூக மேம்பாடு உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு சட்ட திட்டங்களுக்கு அமைவாக அரச அதிகாரிகள் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
எனினும், அண்மைய நாட்களில் மாதகல் போன்ற இடங்களில் அரச அதிகாரிகளின் செயற்பாட்டிற்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் இந்த விடயத்தில் தலையீடுகளைச் செய்துள்ளனர்.
காணி அளவீடுகளை மேற்கொள்வதில் அவர்களுக்கு கரிசனைகள் காணப்படுமாயின் அதுபற்றி கலந்துரையாடல்களைச் செய்வதற்கு நான் எப்போதுமே தயாராகவே உள்ளேன். அவ்வாறிருக்கையில், அரச அதிகரிகளின் செயற்பாடுகளுக்கு பங்கம் ஏற்படுத்துவதானது பொருத்தமற்ற செயற்பாடாகும்.
இவ்விதமான நிலைமைகள் தொடருமாக இருந்தால் வட மாகாணத்தின் எதிர்காலத்தினைக் கருத்திற் கொண்டு சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயங்கப்போவதில்லை என்றார்.
No comments:
Post a Comment