இலங்கையில் கைதான மீனவர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசிடம் ஸ்டாலின் கோரல் : ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசினார் - News View

About Us

About Us

Breaking

Monday, December 20, 2021

இலங்கையில் கைதான மீனவர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசிடம் ஸ்டாலின் கோரல் : ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசினார்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடா்பாக வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசியில் முதல்வா் தொடா்பு கொண்டு ஞாயிற்றுக்கிழமை பேசினார். 

தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு இணங்க உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சா் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவா்களை இலங்கை கடற்படையினா் தாக்குவதும், அவா்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதும் தொடா் கதையாக உள்ளது. 

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையாகவும் உள்ளது.

கடந்த அக்டோபா் மாதம் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்கள் மூவரை இலங்கை கடற்படை விரட்டிச் சென்றதில் அவா்கள் சென்ற படகு மூழ்கியது. இதில் ராஜ்கிரண் என்ற மீனவா் உயிரிழந்தார். 

அதன் தாக்கம் குறைவதற்குள்ளாகவே வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சோ்ந்த 55 மீனவா்களை வலுக்கட்டாயமாக இலங்கை கடற்படை இரு நாட்களுக்கு முன்பு கைது செய்தது. இதற்கு தமிழக அரசியல் தலைவா்களும், மீனவா் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா். 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வா் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். 

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சோ்ந்த 55 மீனவா்களையும், அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 8 படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்போது முதல்வா் கேட்டுக் கொண்டார்.

அதன்பேரில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக மத்திய அமைச்சா் உறுதி அளித்தார்.

இதனிடையே, வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு முதல்வா் கடிதமும் எழுதியுள்ளார்.

தமிழக மீனவா்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை தந்திரமாக தடுத்து நிறுத்தும் இலங்கை கடற்படையின் செயல்பாடுகளை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது என்று அதில் முதல்வா் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment