2024ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க அரசு திட்டம் : பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ - News View

About Us

About Us

Breaking

Monday, December 6, 2021

2024ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க அரசு திட்டம் : பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

நகர்ப்புற குறைந்த வசதிகளைக் கொண்டவர்களுக்கான வீட்டுத் திட்டத்தின் மூலம் 2024ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் மலையகத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த பிரதமர், இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 6000 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நகர அபிவிருத்தி, வீடமைப்பு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் கீழ் 4 இராஜாங்க அமைச்சுக்கள் செயற்படுகின்றன.

இதுவரை நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் 21 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 52 நகர அபிவிருத்தி திட்டங்கள் நிறைவு செய்யப்படும் தருவாயில் உள்ளன. 

அதேபோன்று 2024ஆம் ஆண்டிற்குள் மேலும் 134 நகர அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். நகர அபிவிருத்தி மற்றும் நகரங்களை எழில்படுத்தும் திட்டத்தின் கீழ் 117 நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மற்றும் அடுத்த வருடத்தில் மேலும் 100 திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

அத்துடன் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் அதற்கு தீர்வாக 12 வாகனம் நிறுத்தும் இடம் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பங்களுக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட வீடுகளை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம். அதன் கீழ் நகர, கிராமிய மற்றும் தோட்ட வீடமைப்பு திட்டங்களையும் இடம்பெயர்ந்தவர்களை மீள குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

நகர்ப்புற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அதற்கிணங்க தற்போது 14 ஆயிரத்து 83 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணித்துள்ள நிலையில் அவற்றை மக்களுக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

2024 ஆம் ஆண்டுக்குள் கொழும்பில் உள்ள குறைந்த வசதிகளைக் கொண்ட வீடுகளை மாடி வீட்டு திட்டமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நடுத்தர மக்களுக்கான வீட்டுத் திட்டத்தின் கீழ் 1108 வீடுகளை நிர்மாணித்து இந்த வருடத்தில் மக்களுக்கு கையளித்துள்ளோம். அதேபோன்று மேலும் 13 வீட்டுத் திட்டங்கள் மூலம் 6128 வீடுகளை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நகர வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் 3 வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அதன் மூலம் 928 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

கிராமிய குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான வீட்டுத் திட்டத்தின் கீழ் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு நாளை, எனும் திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 22 கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு கிராமத்துக்கு ஒரு வீடு என்ற வகையில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அந்த திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கும் 71 ஆயிரத்து 110 வீடுகளை நிர்மாணிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் வீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 6 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் தோட்ட மக்களுக்கு 4000 வீடுகளையும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது.

அதேவேளை அடுத்த வருடத்தில் இந்திய நிதி உதவியுடன் தோட்ட மக்களுக்காக 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 

அதேவேளை மேல் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்படும் பாதிப்புகளுக்குத் தீர்வு காணும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment