(இராஜதுரை ஹஷான்)
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் நியமனம் அவசியமற்றது. ஏனெனில் மூவின மக்களின் அரசியல் மற்றும் மதம் சார் பிரச்சினைகளை நாம் நன்கறிவோம். ஒரு சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் பிரதிநிதிகள் செயலணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். தமிழ் உறுப்பினர்களை நியமனத்தில் சிக்கல் நிலை காணப்படுப்படுகிறது. அதாவது கண்டியில் உள்ள ஒருவரை நியமிப்பதில் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் விரும்புவதில்லை. ஆகவே எதிர்வரும் காலத்தில் செயலணியின் உறுப்பினர் நியமனம் பரிசீலனை செய்யப்படும். தமிழ் பிரநிதிகள் இல்லை என போர்க்கொடி தூக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இந்துக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கட்டாய மதமாற்றம் தொடர்பிலும், மதமாற்றம் தடைச்சட்டம் தொடர்பிலும் ஏன் இதுவரை கவனம் செலுத்தவில்லை என ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
சிறுபான்மையினர் என்ற சொற்பதத்தை கூட பயன்படுத்துவதை விரும்பவில்லை. மாகாணம், இனம், மதம் என்ற வேறுபாடுகள் தேசிய ஒருங்கிணைப்பிற்கு பிரதான தடையாக காணப்படுகிறது. ஆகவே நாட்டு மக்களின் தனிப்பட்ட கொள்கைகளை மறந்து இலங்கையர் என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்தி ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச அரங்கில் இலங்கையர்கள் பல்வேறு துறைகளில் முன்னிலை வகிக்கிறார்கள். பல்வேறு சாதனைகளை புரிகிறார்கள். இருப்பினும் அவர்கள் தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், முஸ்லிம் புலம்பெயர் அமைப்புக்கள், சிங்கள புலம்பெயர் அமைப்புக்கள் என இன அடிப்படையில் வேறுபட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் இலங்கையர் அமைப்பு (டயஸ்போரா) என ஒன்றிணைந்தால் நாட்டுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதற்கான அடித்தளத்தை ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணி ஊடாக இடவுள்ளோம்.
அரசியல், சமூகம், இனம், மதம் மற்றும் மொழி ஆகிய காரணிகளை புறக்கணித்து இலங்கையர் என்ற அடையாளத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணிக்கு நாட்டு மக்கள் பொதுத்தன்மையுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிறந்த ஆலோசனை, கருத்துக்கள் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்க தயாராகவுள்ளோம்.
காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதை தொடர்ந்து நாட்டில் பல கலவரங்கள், முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. இப்போராட்டங்களினால் இளைஞர், யுவதிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்கள்.
எதிர்கால தலைமுறையினரது நலனை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. செயலணிக்கு இளைஞர்கள் தங்களின் யோசனைகளை முன்வைக்கலாம்.
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பில் சட்டம் இயற்றுவது செயலணியின் கடமையல்ல, சட்ட உருவாக்கத்திற்கான சட்ட வரைபை தயார் செய்து அதனை உரிய தரப்பினருக்கு சமர்ப்பிப்பது பிரதான பொறுப்பாகும். ஆகவே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை செயற்படுத்த இலங்கையர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கேள்வி
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தும் போது சிறுபான்மையின மக்களின் நிலைப்பாட்டை எவ்வாறு இனங்கண்டு, அடையாளப்படுத்துவீர்கள்?
பதில்
சிறுபான்மை என்ற சொற்பதத்தை முதலில் மறக்க வேண்டும், சிறுபான்மை என்று அடையாளப்படுத்துவதை விரும்பவில்லை. மாகாணம், மொழி, இனம் என்ற வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் செயற்பட வேண்டும்.
தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வேறுபாடுகள் காணப்படுகின்ற காரணத்தினால்தான் 73 வருட காலமாக தேசிய ஒருங்கிணைப்பை ஸ்தாபிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இனம், மதம் மற்றும் மொழி ஆகிய காரணிகளுக்கு செயலணியில் முக்கியத்துவம் வழங்கப்படமாட்டாது. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற இலக்கை அடைவது பிரதான நோக்காமாகும்.
செயலணியின் செயற்பாடுகள் குறித்து தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கலக்கமடைய வேண்டாம். அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சட்ட வரைபு சமர்ப்பிக்கப்படும்.
கேள்வி
உங்கள் (ஞானசார தேரர்) மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை அடைய உங்களால் முடியாது என குறிப்பிடப்படுகிறது. இக்குற்றச்சாட்டுக்கள் உண்மையாகாது என உறுதிப்படுத்த முடியுமா?
பதில்
4 மாத காலத்திற்கு பிறகு இதற்கு பதிலளிக்கிறோம். எனக்கு எதிராகவும், நியமிக்கப்பட்ட செயலணிக்கு எதிராகவும் அரசியல்வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு கவனம் செலுத்த வேண்டிய தேவை கிடையாது.
குறை கூறும் அரசியல்வாதிகளினால் நாட்டில் ஒரு கல்வி முறைமையை கூட உருவாக்க முடியவில்லை. சாஹிரா கல்லூரி, இந்துக் கல்லூரி, ஆனந்தா மற்றும் நாலந்தா என இனம் மற்றும் மதத்தை வேறுப்படுத்திய பாடசாலைகள் பல காணப்படுகின்றன.
கல்வி முறைமையில் வேறுபாடுகள் காணப்படும் போது எதிர்கால தலைமுறையினரும் சமூகத்தில் வேறுபாடுகளுடன் வாழ முற்படுவார்கள். இவற்றை மாற்றவே முற்பட்டுள்ளோம்.
கேள்வி
செயலணியின் திட்டமிடல் என்ன ?
பதில்
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுக்கவில்லை. இதற்கு முற்பட்ட காலத்தில் இதற்கான போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரர் இதற்கான போராட்டத்தை முன்னெடுத்து ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தினார். ஆனால் அரசியலுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்ட அரசாங்கங்கள். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை ஸ்தாபிக்க முயற்சிக்கவில்லை.
சமூக குழுக்களின் மத்தியில் காணப்படும் சட்டங்கள் சர்ச்சைக்குரியதாக காணப்படுகின்றமை பகிரங்கமாக பேசப்படுகிறது. ஆனால் அச்சட்டங்களை நீக்கவும், திருத்தவும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. பெருங்காட்டை தூய்மைப்படுத்தும் பொறுப்பு எமக்குண்டு.
கேள்வி
எந்த சட்டங்களை பற்றி குறிப்பிடுகின்றீர்கள்
பதில்
எமது நாட்டில் பொதுச்சட்டத்திற்கு அனைத்து இன மக்களும் கட்டுப்படுகிறார்கள். சட்டத்தின் முன் எவரும் விதிவிலக்கல்ல, மறுபுறம் கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம் மற்றும் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம். இச்சட்டங்கள் ஆங்கிலேயர் காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டது. அவை தற்போது முரண்பட்டதாக காணப்படுகிறது. முரண்பாடுகளை நீக்கி எமக்கான சட்டத்தை உருவாக்கிக் கொள்வது அவசியமாகும்.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்ரஸா பாடசாலை, காதி நீதிமன்றம், புர்கா, ஸரியா வங்கி முறைமை என பல்வேறுப்பட்ட விடயங்கள் பேசப்பட்டன ஆனால் அவற்றுக்கு எதிராக சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. குறைந்தப்பட்சம் திருததம் செய்யவுமில்லை.
கேள்வி
செயலணியில் தமிழ் பிரதிநிதிகள் ஏன் நியமிக்கப்படவில்லை ?
பதில்
ஆணைக்குழுக்கள் மற்றும் செயலணிகளுக்கு இன அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது குறித்து பல சிக்கல் நிலை காணப்படுகின்றன. நான்கு முஸ்லிம் சமூகத்தினர் செயலணியில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கிறார்கள். தமிழ் உறுப்பினர்களை நியமிப்பதில் சிக்கல் நிலை காணப்படுகிறது.
அதாவது கண்டியில் உள்ள ஒருவரை உறுப்பினராக நியமிக்க யாழ்ப்பாணத்தில் உள்ளவர் விரும்பவில்லை. அத்துடன் தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரச்சினை கிடையாது. தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் அரசியல் மற்றும் சமய பிரச்சினைகளை நன்கு அறிவோம். தமிழ் உறுப்பினர்கள் செயலணியில் இல்லை என போர்க்கொடி உயர்த்தும் அரசியல்வாதிகள், தமிழ் மொழிக்காகவும், இந்து மத பாதுகாப்பிற்காகவும் இதுவரையில் என்ன செய்துள்ளார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஒரு காலகட்டத்தில் இந்துக்களை கிருஸ்தவர்களாக மாற்றும் நடவடிக்கைகள் பரவலாக இடம்பெற்றன. மதமாற்றத்திற்கு தடை செய்யும் சட்டமூலம் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ், மகேஸ்வரன் ஆகியோர் இவ்விடயத்தில் முன்னின்று செயற்பட்டார்கள். ஆனால் இதுவரை மதமாற்றம் தடைச்சட்டம் இயற்றப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகளை தமிழ் அரசியல் கட்சிகளும் முன்னெடுக்கவில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விருப்பம் அரசியல்வாதிகளுக்கு கிடையாது. பிரச்சினைகள் தீர்ந்தால் அரசியல் செய்ய ஆதாரம் கிடையாது. உண்மையான பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் போது இனவாதியாக சித்தரிக்கப்பட்டுள்ளோம்.
கேள்வி
செயலணியின் உறுப்பினர் நியமனத்திற்கான பெயர் பரிந்துரை செய்தது யார், ஜனாதிபதி பொது மன்னிப்பு மாற்றியமைக்கப்படுமா?
பதில்
உறுப்பினர் நியமனம் தொடர்பில் அறிந்துகொள்ள எதிர்வரும் நாட்களில் வாய்ப்பு வழங்கப்படும். ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலையான முதல் பௌத்த துறவி நான் அல்ல, நாட்டை பாதுகாக்க இதுவரையில் முன்னெடுத்த போராட்டம் அதனால் எமக்கு ஏற்பட்ட விளைவு ஆகியவற்றை கருத்திக் கொண்டு எம்மை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
கேள்வி
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுபலசேனா அமைப்பின் மீதும் அதன் பொதுச் செயலாளர் உங்கள் (ஞானசார) மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சட்டமாதிபர் திணைக்களம் பல விடயங்களை ஆராய்கிறது. இவ்வாறான பின்னணியில் உங்களை செயலணியின் தலைவராக நியமித்துள்ளமை நடைமுறையில் உள்ள சட்டத்தை அவமதிப்பதாக அமையாதா ?
பதில்
உங்களின் கேள்விக்கு அமைய ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை நடத்தியது. பொதுபலசேனா அல்லது நான் அல்ல. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் தருணம் இதுவல்ல அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதம் எல்லை கடந்த நிலையில் ஆதிக்கம் பெற்றுள்ளது.
நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி தொடர்பிலான வர்த்தமானியை முதலில் வாசியுங்கள், முழுமையாக வாசித்திருந்தால் இவ்வாறான கேள்வியை கேட்கமாட்டீர்கள். அடிப்படைவாதிகள் பின்பற்றும் சட்டங்களை அவர்கள் பொதுச்சட்டமாக்க முயற்சித்தார்கள் அதனை எதிர்த்தோம் அதனால் அரசியல்வாதிகளினால் தவறாக சித்தரிக்கப்பட்டோம்.
அடிப்படைவாத அமைப்புக்கள், அவர்களின் செயற்பாடுகள் குறித்து கருத்துரைக்க எமக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. எமது கருத்து முரணாக கருத்துரைக்க அரசியல் ஆதரவுடன் ஊடகங்களில் ஒரு தரப்பினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டன. இதனால் உண்மை முடக்கப்பட்டது.
கேள்வி
பெரும்பான்மை மக்களின் சட்டத்தை சிறுபான்மையின மக்கள் மீது பலவந்தமாக திணிக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டப்படுகிறது.
பதில்
அவ்வாறன குற்றச்சாட்டை அரசியல்வாதிகள் மாத்திரம் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள்.
கொவிட் தாக்கத்தில் இருந்து நாடு மீள வேண்டும் என்பதற்காக அண்மையில் வடக்கில் உள்ள பழமையான இந்து கோயிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுப்பட்டோம். அப்போது அங்கு வந்த தமிழ் இளைஞர்கள் இப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் போதை பொருள் பழக்கத்திற் முழுமையாக அடிமையாகியுள்ளார்கள் அனைவரது எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆகவே போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிக்க புனர்வாழ்வு நிலையத்தை இப்பிரதேசத்தில் உருவாக்குமாறு தமிழ் இளைஞர்கள் கோரிக்கை விடுத்தார்கள். பிரபாகரன் காலத்தில் இவ்வாறான நிலை காணப்படவில்லை, அரசியல்வாதிகள் இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதில்லை எனவும் குறிப்பிட்டார்கள். இவை தொடர்பில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி என குறிப்பிட்டுக் கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறியவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் மன்னார் மாவட்டத்தில் இந்து ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்க முடியுமா என்ற சவாலை முன்வைக்கிறேன். அந்த அளவிற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மத காரணிகள் பல பிளவுகளை ஏற்படுத்தியுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கொழும்பில் சிங்களவர்களுடன் நட்புறவுடன் பழகிக் கொண்டு வடக்கில் உள்ள மக்களை சிங்களவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு அரசியல் செய்கிறார்கள். வடக்கில் பௌத்தவர்களுக்கு உரிமை கிடையாது என்பது எந்தளவிற்கு நியாயமாகும்.
நாட்டில் இன முரண்பாட்டை ஏற்படுத்த பதிவு செய்யப்பட்ட 500 கிருஸ்தவ அமைப்புக்கள் தற்போது பல்வேறு கோணங்களில் செயற்படுகின்றன. காலம் காலமாக புரையோடியுள்ள பிரச்சினைகளுக்கு அரச தலைவர்கள் தீர்வு காண முயற்சித்தாலும் அரச அதிகாரிகள் அதற்கு இடமளிப்பதில்லை. அவர்கள் அரசியல்வாதிகளின் நோக்கத்திற்கமைய செயற்படுகிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment