சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை மக்கள் உரிய வகையில் பின்பற்றுகின்றார்களா என்பதை ஆராய்வதற்காக அரசாங்கத்தினால் கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமென இலங்கை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இந்த வாரம் அந்த எண்ணிக்கை சற்று அதிகரித்துக் காணப்படுவதாகவும் மேற்படி சங்கத்தின் தலைவர் பத்மா எஸ். குணரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க வீடுகளிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை தொடர்ந்தும் முன்னெடுப்பது சிறந்ததென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை இந்த வாரத்தில் சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது. மரணங்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்துள்ளது.
மக்கள் தற்போது செயற்படும் விதத்தின் பாதிப்புகளை கண்டுகொள்ள மேலும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் செல்லலாம்.
எமது நாட்டில் 62 வீதத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பெரிதும் பாதுகாப்பு கிட்டும் என எதிர்பார்க்கலாம்.
தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு வேறு உடல் பலவீனமாகும் நோய்கள் ஏற்படுமானால் அவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படலாம்.
எமக்கு வைரஸ் தொற்று நோய் சுகமாகிவிட்டது என எவரும் சிந்திக்க முடியாது. இது எம்மால் இனங்கண்டுகொள்ள முடியாத வைரஸ் என்பதால் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது முக்கியமாகும்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment