யுகதனவி பங்கு விற்பனைக்கு எதிரான மனுக்களை பூரண நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரிக்கவும் : உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார் சட்டமா அதிபர் - News View

About Us

About Us

Breaking

Friday, November 12, 2021

யுகதனவி பங்கு விற்பனைக்கு எதிரான மனுக்களை பூரண நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரிக்கவும் : உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார் சட்டமா அதிபர்

யுகதனவி அனல் மின்னுற்பத்தி நிலைய பங்குகள் விற்பனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை, பூரண நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அரசின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி, கர்தினால் மெல்கம் ரஞ்சித், எல்லே குணவன்ச தேரர், ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க உள்ளிட்டோர் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மனுக்கள் இன்று (12_ புவனேக அலுவிஹாரே, AHMD நவாஸ், மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பர்ஸானா ஜெமீல் பூரண நீதியரசர்கள் குழாமை நியமிக்கும் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், அரசியலமைப்பின் 132 (3) பிரிவின் கீழ் பூரண நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அதை பரிசீலிக்க வேண்டுமென அவர் நீதிமன்றத்தை கோரினார்.

குறித்த கோரிக்கையை கருத்தில் எடுத்த நீதியரசர்கள் குழாம், குறித்த விடயத்தை பிரதம நீதியரசருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதன்போது, மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடபப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பர்ஸானா ஜெமீல், இந்த வழக்கு தொடர்பாக வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.

அப்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஏனைய சட்டத்தரணிகளும் இந்தக் கோரிக்கையை ஆமோதித்தனர்.

இதன்படி, இன்று முதல் மூன்று வாரங்களுக்குள் தமது வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.

இதனைதத் தொடர்ந்து குறித்த வழக்கை நவம்பர் 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment