“நண்பர் எம்.ஐ.எம். முஹிதீன் அவர்களின் மறைவு சமூகத்திற்கு பாரிய இழப்பாகும்" - அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் - News View

Breaking

Saturday, November 13, 2021

“நண்பர் எம்.ஐ.எம். முஹிதீன் அவர்களின் மறைவு சமூகத்திற்கு பாரிய இழப்பாகும்" - அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்

“தலைசிறந்த வரலாற்று ஆய்வாளரும், ஆவணக் காப்பாளரும், அரசியல் செயற்பாட்டாளரும், நூலாசிரியரும், பன்முக ஆளுமைமிக்கவருமான நண்பர் எம்.ஐ.எம். முஹிதீன் அவர்களின் மறைவு சமூகத்திற்கு பாரிய இழப்பு மட்டுமல்லாது, கணிப்பீடுகளைக் கச்சிதமாக மேற்கொண்டு, அவ்வாறு திரட்டிய தரவுகளின் அடிப்படையில் பயனுள்ள எதிர்வுகூறல்களை முன்வைக்கும் ஆற்றல் வாய்ந்தவர்களைப் பொறுத்தவரை நிவர்த்திக்க முடியாததோர் இடைவெளியையும் ஏற்படுத்தியிருக்கிறது"

மேற்கண்டவாறு அன்னாரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியூடாக அரசியல் பயணத்தைத் தொடர்ந்த அன்னார் எமது கட்சியின் ஸ்தாபகர் பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடனும், என்னுடனும் இணைந்து பணியாற்றியிருக்கின்றார்.

நில அளவைத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த அவர், நாட்டின் வட கிழக்கிலும், ஏனைய மாகாணங்களிலும், குடிப் பரம்பலுக்கும், இன விகிதாசாரத்துக்கேற்ப உரிய கணிப்பீடுகளை அச்சொட்டாக மேற்கொள்வதில் ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தார்.

தேர்தல் சீர்திருத்தம், அதிகாரப் பகிர்வு போன்வற்றிலும் அவர் அதிக அக்கறை கொண்டிருந்தார்.

கிராமங்கள் தோறும் சென்று எல்லை நிர்ணயங்களை பல்வேறு மட்டங்களிலும் மேற்கொண்டு அவற்றை முறையாக ஆவணப்படுத்துவதிலும், அறிக்கையிடுவதிலும் அவர் சிறந்து விளங்கினார்.

முன்னாள் அமைச்சர் பதியுத்தீன் மஹ்மூத் தலைமையில், தமிழீழ விடுதலைப் புலி பிரமுகர்களுடன் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் அவர் பங்கேற்றிருந்தார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவனத்தை வழங்குவானாக. மனைவி மற்றும் புதல்வியருக்கும் குடும்பத்தினருக்கும் மன ஆறுதலை அளிப்பானாக.

No comments:

Post a Comment