அலுவலக நேரத்துக்கு பிறகு ஊழியர்களுக்கு அதிகாரிகள் மெசேஜ் அனுப்ப தடை : போர்த்துகலில் புதிய சட்டம், மீறினால் அபராதம் - News View

Breaking

Sunday, November 14, 2021

அலுவலக நேரத்துக்கு பிறகு ஊழியர்களுக்கு அதிகாரிகள் மெசேஜ் அனுப்ப தடை : போர்த்துகலில் புதிய சட்டம், மீறினால் அபராதம்

போர்த்துகல் நாட்டில் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள 'ஓய்வுக்கான உரிமை' சட்டப்படி வேலை நேரத்துக்குப் பிறகு மேலதிகாரிகள் ஊழியர்களுக்கு மெசேஜ் அனுப்புவதோ, ஈ மெயில் அனுப்புவதோ தடை செய்யப்படுகிறது.

வீட்டில் இருந்து வேலை செய்வது அதிகரித்து வரும் நிலையில், அதனை முறைப்படுத்தும் வகையில் அந்நாட்டில் தொழிலாளர் சட்டங்கள் வலுப்படுத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த சட்டம் வருகிறது. வேலை - வாழ்க்கை இரண்டுக்கும் சமநிலை நிலவுவதை மேம்படுத்தும் வகையில் செய்யப்படும் மாற்றம் இது.

இந்த சட்டப்படி, 10 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் ஒப்புக் கொள்ளப்பட்ட வேலை நேரம் தாண்டி தங்கள் ஊழியர்களைத் தொடர்பு கொண்டால் அவை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

குழந்தைகள் உள்ள ஊழியர்கள் அலுவலகம் வராமலே வேலை செய்வதை அனுமதிக்கும் வகையில் விதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இதன்படி, தங்கள் குழந்தைகளுக்கு 8 வயது ஆகும் வரை, முன் அனுமதி பெறாமல், கால வரம்பின்றி ஊழியர்கள் தங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அது மட்டுமல்லாமல், வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதால் ஏற்படும் கூடுதல் மின்சார, இணையக் கட்டணங்களை நிறுவனங்கள் அளிக்க வேண்டியிருக்கும்.

வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதால் ஊழியர்கள் எதிர்கொள்ள நேரிடும் தனிமையை சமாளிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் இந்த சட்டத்தில் அடக்கம்.

நிறுவனங்கள் இந்த தனிமை சிக்கலைப் போக்க அவ்வப்போது நேரிடையாக பங்கேற்கும் கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படும்.

ஆனால் இந்த சட்டத்தின் சில அம்சங்களுக்கு போர்த்துகல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை.

எடுத்துக்காட்டாக, வேலை நேரத்துக்குப் பிறகு, வேலை தொடர்பான சாதனங்கள் அனைத்தையும் அனைத்து வைப்பதற்கான 'டிஸ்கனெக்ஷன் உரிமை' க்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கவில்லை.

"தொலைவில் இருந்து வேலை செய்வது முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரும். ஆனால், அதன் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது அவசியம்" என போர்த்துகல் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் அனா மென்டெஸ் கோடின்ஹோ ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தொழிலாளர் பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்படுவதால் நிறைய வெளிநாட்டவர்கள் போர்த்துகல் வருவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"இந்த டிஜிடல் நாடோடிகளும், தொலைவில் இருந்து வேலை செய்வோரும் வாழ்வதற்குத் தேர்ந்தெடுப்பதற்கான உலகின் சிறந்த இடங்களில் ஒன்று போர்த்துகல் என்று நாங்கள் கருதுகிறோம். அவர்களை போர்த்துகல் நோக்கி இழுக்க நாங்கள் விரும்புகிறோம்," என்று கோடின்ஹோ தெரிவித்தார்.

தொழில் முனைவோரையும், சுயாதீனமாக வேலை செய்வோரையும் இழுப்பதற்காக தாற்காலிக குடியிருப்போர் விசா வழங்கும் திட்டம் ஒன்றும் போர்த்துகலில் உள்ளது.

மெடெய்ரா என்ற போர்த்துகல் தீவு ஒன்றில் 'டிஜிடல் நாடோடி கிராமம்' ஒன்று உள்ளது. இங்கே, இலவச வைஃபை, அலுவலக மேசை வசதிகள் உள்ளன.

வழக்கமான சுற்றுலா விசாக்களுக்கு பதிலாக 'டிஜிடல் நாடோடி' விசாக்கள் என அழைக்கப்படும் இந்த விசாக்களை வழங்கும் வேறு சில நாடுகளும் உள்ளன. பார்படோஸ், குரோயேஷா போன்றவை அத்தகைய நாடுகளில் சில.

No comments:

Post a Comment