எரிபொருளின் விலையை நிர்ணய தன்மையில் பேண 'விலை நிர்ணய நிதியம்' ஸ்தாபிப்பு : மங்கள சமரவீர அறிமுகப்படுத்திய விலை சூத்திரத்தில் குறைபாடுகள் - அமைச்சர் உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Friday, November 26, 2021

எரிபொருளின் விலையை நிர்ணய தன்மையில் பேண 'விலை நிர்ணய நிதியம்' ஸ்தாபிப்பு : மங்கள சமரவீர அறிமுகப்படுத்திய விலை சூத்திரத்தில் குறைபாடுகள் - அமைச்சர் உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருளின் விலையை நிர்ணய தன்மையில் பேண்வதற்காக வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் 'விலை நிர்ணய நிதியம்' ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் எரிபொருளின் விலையை இந்நிதியம் தீர்மானிக்கும். உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் போது அதன் நிவாரணத்தை மக்களுக்கு உடனடியாக வழங்க முடியாது ஏனெனில் கடந்த எட்டு மாத காலத்திற்குள் எரிபொருளின் விலை 36 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது. எரிபொருள் விலை நிர்யணத்திற்காக விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2021ஆம் ஆண்டு 21ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 5ஆம் பகுதியில் தேசிய கனிய வளங்கள் கண்காணிப்பாளராக கடமையாற்றுவதற்கு நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் அந்நிறுவனம் தேசிய கனிய வளங்கள் கண்காணிப்பாளராக விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமைச்சரவை அங்கிகரித்த தேசிய எரிவாயு கொள்கைக்காக தேசிய கனிய வளங்கள் கண்காணிப்பாளர் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய கனிய வளங்கள் கண்காணிப்பாளராக ' இலங்கை எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம்' என்ற பெயரில் இலங்கை பெற்றோலிய வளங்கள் கூட்டுத்தாபன நிர்வாகத்தில் நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கிகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இலங்கையில் கனிய வளங்கள் மற்றும் எரிவாயு ஆய்வு நடவடிக்கைகளுக்காக முன்வரும் நிறுவனங்களுடன் ஒன்றினைந்து பங்காண்மை நிறுவனமாக செயற்பாடுவது இந்நிறுவனத்தின் பிரதான பொறுப்பாகும்.

அந்த வகையில் இலங்கையில் கனிய வளங்கள் மற்றும் எரிவாயு தொடர்பில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் இந்நிறுவனத்திற்கு 15 சதவீத உரிமத்தை வழங்க வேண்டும்.

எரிபொருள் விலையை நிலையான மட்டத்தில் பேண்வதற்காக நிதியத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் போது அதன் சுமையை மக்கள் மீது செலுத்தாமல் நிதியத்தின் ஊடாக அப்போதைய சூழ்நிலையை முகாமைத்துவம் செய்வது நிதியத்தின் பிரதான பொறுப்பாகும்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் போது அதன் நிவாரணத்தை மக்களுக்கு நேரடியாக வழங்க முடியாது நிவாரணத்தை நிதியத்தின் ஊடாக சேமிக்கப்படும்.

வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் நிதியத்தின் தலைவராகவுள்ளார். அரச நிதி கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள், எல்.ஐ.ஓ.சி நிறுவன பிரநிதிகள், கடற்றொழில் அமைச்சரினால் பெயர் குறிப்பிடப்படும் கடற்றொழில் சங்கத்தின் பிரதிநிதி, போக்குவரத்து அமைச்சரினால் பெயர் குறிப்பிடப்படும் போக்குவரத்து சங்கத்தின் பிரதிநிதி, வலுசக்தி அமைச்சரினால் பெயர் குறிப்பிடப்படும் பொருளாதாரம் மற்றும் கணக்கியல் திறன் கொண்ட இரு பிரநிதிகள் நிதியத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். எரிபொருள் விலையை நிலையான தன்மையில் பேணும் நிதியம் இனி எரிபொருளின் விலையை தீர்மானிக்கும்.

எரிபொருள் விலையை நிலையாக பேண்வதற்கான நிதியத்தை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை யோசனை 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி சமர்பிக்கப்பட்டது அதற்கு கடந்த 23ஆம் திகதி அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த எட்டு மாத காலத்திற்குள் எரிபொருளின் விலை 36 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது. ஆகவே இந்த நிதியத்தின் ஊடாக மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க முடியாது. எரிபொருளுக்காக விலை சூத்திரம் அறிமுகப்படுத்துவது அவசியமாகும்.

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிமுகப்படுத்திய விலை சூத்திரத்தில் இரண்டு பிரதான குறைப்பாடுகள் காணப்பட்டன. அறிமுகப்படுத்தப்பட்ட விலை சூத்திரத்தில் வெளிப்படை தன்மை காணப்படவில்லை மாதமொருமுறை எரிபொருளில் விலை இவ்வளவு ரூபாவினால் அதிகரிக்கப்படும், குறைவடையும் என குறிப்பிடப்பட்டாலும் அதனை வகுக்கும் முறைமை தெளிவுப்படுத்தப்படவில்லை. உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைவதற்கு அமைவாக விலை குறைக்கப்படவில்லை.

எக்காரணிகளுக்காகவும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 2 நாட்களுக்கு தேவையான அளவில் எரிபொருள் காணப்படும் பொய்யான பிரசாரத்தை கருத்திற் கொண்டு நுகர்வோர் தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் பெறும் போது எரிபொருள் நிரப்பும் நிலையங்களில்தான் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்.

1956ஆம் ஆண்டுதான் முதலாவது கூட்டணி அரசாங்கம் உருவாக்கப்பட்டது அப்போதைய காலகட்டத்தில் இருந்து கூட்டணி அரசாங்கத்தில் பிரச்சினைகள் தோற்றம் பெறுவது இயல்பு பல்வேறு கொள்கைகள் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றினையும் போது முரண்பாடுகள் தோற்றம் பெறுவதொன்றும் பெரிதுப்படுத்த வேண்டிய விடயமல்ல என்றார்.

No comments:

Post a Comment