இந்தியா சென்று கைதானவர்களை மீட்டுத் தாருங்கள் : உறவினர்கள் கண்ணீர் மல்க அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, November 5, 2021

இந்தியா சென்று கைதானவர்களை மீட்டுத் தாருங்கள் : உறவினர்கள் கண்ணீர் மல்க அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை

வெளிநாடுசெல்வதற்காக, சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து அங்கு தங்கியிருந்த குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த 61 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறிப்பாக கைது செய்யப்பட்டவர்களில் 23 பேர் திருச்சி சிறப்பு முகாமிலும், 38 பேர் பெங்களூர் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குகின்றனர். அவர்களை மீட்டுத்தருமாறு, அவர்களது உறவினர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்ததுடன், மகஜர்களும் கையளித்துள்ளனர்.

இந்தியாவில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முல்லைத்தீவு - கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத்தில் நேற்று (04) சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில், இந்த விடயத்தில் இரண்டு விதமான பிரச்சினைகள் உள்ளன. இந்தியாவின் சட்டதிட்டங்களை மீறியமை என்பது தொடர்பிலான ஒரு பிரச்சினை, இலங்கையின் சட்டதிட்டங்களை மீறியமை என்பது தொடர்பிலான பிரச்சினை என்ற இரு பிரச்சினைகள் இருக்கின்றன.

இந்த விடயம் தொடர்பிலே இதுவரை இரு தரப்புடனும் நேரடியாக நான் பேசவில்லை. அதற்கு முன்பதாக சிறையிலே இருப்பவர்களின் உறவினர்களான உங்களைச் சந்தித்து, உங்களுடைய கோரிக்கைக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டு, நான் இரு நாட்டு அரச தரப்புக்களுடனும் பேசலாம் என நினைக்கின்றேன்.

எனவே நீங்கள் உங்களுடைய கோரிக்கைகளை எனக்கு எழுத்து மூலம் தாருங்கள். நான் ஒரு வாரத்திற்குள் இது குறித்து ஆராய்வேன். குறிப்பாக இது தொடர்பிலே இலங்கை அரசாங்கத்துடனும், இந்திய அரசாங்கத்துடனும் பேச்சுக்களை நடாத்த வேண்டும். எனவே நீங்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என்றார்.

விஜயரத்தினம் சரவணன்

No comments:

Post a Comment