அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டிருக்கும் ஒப்பந்தம் மிக மோசமான தேசத்துரோகம் : சரியா ? தவறா ? 'இரகசிய வாக்கெடுப்பை' நடாத்துமாறும் அரசாங்கத்திற்கு சவால் விடுத்தார் சம்பிக்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டிருக்கும் ஒப்பந்தம் மிக மோசமான தேசத்துரோகம் : சரியா ? தவறா ? 'இரகசிய வாக்கெடுப்பை' நடாத்துமாறும் அரசாங்கத்திற்கு சவால் விடுத்தார் சம்பிக்க

(நா.தனுஜா)

கெரவலப்பிட்டி 'யுகதனவி' மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை வழங்குவது குறித்து அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டிருக்கும் ஒப்பந்தமானது மிக மோசமான தேசத்துரோக செயற்பாடாகும். இதனால் எமது நாடு அமெரிக்காவின் 'மின்சார மாஃபியாவிற்கு' பலியாக நேரிடும் அதேவேளை சர்வதேச ரீதியிலான இராஜதந்திர நெருக்கடிகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியேற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி மேற்படி ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை சரியா ? தவறா ? என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் 'இரகசிய வாக்கெடுப்பொன்றை' நடாத்துமாறும் அவர் அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் புதன்கிழமை (3) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, மின்சார சபை ஊழியர்களும் அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அதுமாத்திரமன்றி நாட்டின் சில பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்படுமாயின், தாம் அது குறித்துப் பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மின் வழங்கலை அரசாங்கம் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. அதன் மூலம் போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முற்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறான போராட்டங்களால் எதிர்வரும் காலங்களில் மின்சாரமோ அல்லது நீர் வழங்கலோ துண்டிக்கப்படுமானால், அது தற்போது பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களை மேலும் அசௌகரியத்திற்கு உட்படுத்துவதாகவே அமையும்.

இத்தகைய சூழ்நிலை தோற்றம் பெற்றிருப்பதற்கான காரணம் என்ன? கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் மின்சார சபை ஊழியர்கள் மிகுந்த பொறுமையுடன் நாடளாவிய ரீதியில் எவ்வித இடையூறுகளுமற்ற மின் வழங்களை உறுதி செய்தார்கள்.

அவ்வாறிருக்கையில் தற்போது எமது நாட்டின் மின் வழங்கல் துறையை பிற தரப்பினரிடம் கையளிப்பதற்கும் அத்துறையை முழுமையாக சீர்குலைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதன் விளைவாகவே மின்சார சபை ஊழியர்களும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் இத்தகைய போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கெரவலப்பிட்டி 'யுகதனவி' மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிராக அவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டுள்ளனர். எனவே இதற்கு ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் உள்ளடங்கலாக ஒட்டு மொத்த அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும்.

இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில், இதுவோர் வெளிநாட்டு முதலீடு என்று கூறப்படுகின்றது. ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லை. மாறாக இதன் விளைவாக எமது நாட்டிற்குச் சொந்தமான நிதி வெளிநாடொன்றின் வசமாகப்போகின்றது.

'யுகதனவி' மின்னுற்பத்தி நிலையமானது ரூபாவில் செலுத்த வேண்டிய ஒரு தொகுதி கடன்களையும் டொலர்களில் செலுத்த வேண்டிய பிறிதொரு தொகுதி கடன்களையும் கொண்டிருக்கின்றது. அதன்படி டொலர்களில் செலுத்த வேண்டிய கடன் தொகை அடுத்த வருட ஆரம்பத்துடன் முடிவடையும். அதன் பின்னர் ரூபாவில் செலுத்த வேண்டிய கடன் மாத்திரமே எஞ்சியிருக்கும்.

எனவே உண்மையில் 'யுகதனவி' மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகள் மூலம் எதனைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது? இந்த மின்னுற்பத்தி நிலையத்திற்கு இலங்கை மின்சார சபை அடுத்து வரும் 11 வருடங்களில் செலுத்தவிருக்கும் 225 பில்லியன் ரூபா பணத்தில் (சுமார் 1100 மில்லியன் அமெரிக்க டொலர்) 40 சதவீதத்தைப் பெற்றுக் கொள்வதே இதன் நோக்கமாகும்.

சுருக்கமாகக் கூறுவதானால் தற்போது ரூபாவில் செலுத்த வேண்டியுள்ள கடன்கள் டொலர்களில் செலுத்த வேண்டியவையாக மாற்றமடையும். அதன்படி எதிர்வரும் 11 வருட காலத்தில் சுமார் 610 மில்லியன் டொலர் நிதி (ரூபாவின் தற்போதைய பெறுமதியின் அடிப்படையில்) எமது நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும். ஆகவே இது எந்த வகையிலும் ஓர் முதலீடாக அமையாது என்பது தெளிவாகியுள்ளது.

அடுத்ததாக இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்டிருந்த விலைமனுக் கோரலில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை விடவும் இலாபகரமான தொகைக்கே பங்குகள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகின்றது.

ஆனால் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின்படி குறித்த அமெரிக்க நிறுவனம் வங்குரோத்து நிலையில் இருப்பதுடன் அது ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை இலாபத்தை உழைக்கவில்லை என்றும் அறிய முடிகின்றது.

அதுமாத்திரன்றி இவ்வொப்பந்தத்தில் உள்ள மிக முக்கியமான பிரச்சினை எதுவென்றால், நாட்டின் மின்சார உற்பத்திக்கு அவசியமான இயற்கை திரவ எரிவாயுவை விநியோகிக்கின்ற உரித்தும் குறித்த அமெரிக்க நிறுவனத்திற்கே வழங்கப்படுவதாகும்.

இந்த எரிவாயு விநியோகம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், அவ்விநியோகத்தின் மூலம் குறித்த அமெரிக்க நிறுவனம் வருடாந்தம் சுமார் 250 - 300 மில்லியன் டொலர் இலாபத்தை பெறும்.

ஏற்கனவே டொலர் பற்றாக்குறையினால் எமது நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய மிக மோசமான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்க முடியாது.

மேலும் நாடு பெருமளவான எரிபொருள் மற்றும் எரிவாயு வளத்தைக் கொண்டிருப்பதாகவும் அதன் மூலம் நாட்டின் கடன்களை முழுமையாக மீளச் செலுத்த முடியும் அத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் கூறுகின்றார்.

ஆனால் அந்தளவு எரிபொருள் எமது நாட்டில் இல்லை. ஆனால் ஏற்கனவே நாட்டின் இருக்கின்ற வளத்தை வெளிநாட்டிற்கு வழங்கி விட்டு, வெளிநாட்டிலிருந்து அதிக பெறுமதிக்கு எரிவாயுவைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையிலேயே அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது.

ஆகவே கெரவலப்பிட்டி 'யுகதனவி' மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை வழங்குவது குறித்து அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டிருக்கும் ஒப்பந்தமானது மிக மோசமான தேசத்துரோக செயற்பாடாகும்.

அதுமாத்திரமன்றி இதனால் அமெரிக்காவின் 'மின்சார மாஃபியாவிற்கு' நாடு பலியாக நேரிடும் என்பதுடன் சர்வதேச ரீதியிலான நெருக்கடிகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியேற்படும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் 'யுகதனவி' மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை சரியா? தவறா? என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் 'இரகசிய வாக்கெடுப்பொன்றை' நடாத்துமாறு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment