முட்டாள்த்தனமான தீர்மானத்தினால் இலங்கை பாரதூரமான இராஜதந்திர அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது : இரு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தமில்லையென்றால் எதற்காக சீனத் தூதுவருக்கு விளக்கமளித்தனர் ? - ஜே.வி.பி. - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

முட்டாள்த்தனமான தீர்மானத்தினால் இலங்கை பாரதூரமான இராஜதந்திர அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது : இரு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தமில்லையென்றால் எதற்காக சீனத் தூதுவருக்கு விளக்கமளித்தனர் ? - ஜே.வி.பி.

(எம்.மனோசித்ரா)

சர்வதேச அரசியல் குறித்த இராஜதந்திர அறிவு இல்லாமையினால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பனிப்போரை கவனத்தில் கொள்ளாமல் சீன உரம் நிராகரிக்கப்பட்டதன் பின்னர் இந்தியாவிலிருந்து உரத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. இந்த முட்டாள்த்தனமான தீர்மானத்தின் காரணமாக இலங்கை பாரதூரமான இராஜதந்திர அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) எச்சரித்துள்ளது.

சீன உரத்தின் மாதிரி தொடர்பான பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட முன்னரே கடன் சான்றுப்பத்திரம் வழங்கப்பட்டமையால், அதனை கொள்வனவு செய்தாலும், கொள்வனவு செய்யா விட்டாலும் சர்வதேச சட்டதிட்டங்களுக்கமைய 210 கோடி ரூபாவை சீன நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு மக்கள் வங்கி தள்ளப்பட்டுள்ளதாகவும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.

ஜே.வி.பி. தலைமையகத்தில் புதன்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இரசாயன உர இறக்குமதியை தடை செய்வதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முட்டாள்த்தனமான முடிவினால் விவசாயிகள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

இதன் காரணமாக சீனாவிலிருந்து 96,000 மெட்ரிக் தொன் இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்ட போதிலும், அதில் ஏர்வீனியா போன்ற அபாயம் மிக்க பற்றீரியாக்கள் கண்டறியப்பட்டமையால் அந்த திட்டமும் தோல்வியடைந்தது. அதன் காரணமாக தற்போது நாட்டுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் வெளியாக முன்னரே கடன் சான்றுப் பத்திரம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது குறித்த சீனக் கப்பல் பலவந்தமாக இலங்கை கடற்பரப்பிற்குள் வருகை தந்துள்ளது.

கடன் சான்றுப் பத்திரம் விடுவிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக குறித்த கப்பலில் உள்ள உரத்தைப் பெற்றுக் கொண்டாலும், பெறாவிட்டாலும் 210 கோடி ரூபாவை மக்கள் வங்கி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

யுனிஃபோர்ம் கஸ்டம்ஸ் அன்ட் பிரக்டிஸ் என்ற சர்வதேச சட்டதிட்டங்களுக்கமைய இந்த நிர்ப்பந்தத்திற்கு மக்கள் வங்கி தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் இது இரு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் அல்ல என்றும் இலங்கையின் முகவர் நிறுவனமொன்றுக்கும் சீன நிறுவனமொன்றுக்கும் இடையிலான விவகாரம் என்று ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அவர் கூறுவதைப் போன்று இது இரு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் அல்ல என்றால் விவசாய அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் எதற்காக சீன தூதரகத்திற்குச் சென்று தூதுவருக்கு விளக்கமளித்தனர் ? தூதரகம் எதற்காக மக்கள் வங்கிக்கு அச்சுறுத்தல் அறிவித்தலை வெளியிட்டது? மக்கள் வங்கி எதற்காக விளக்கமளித்து அறிவித்தலை வெளியிட்டது? இந்த விவகாரம் இரு அரசாங்கங்களுக்கு இடையிலான விவகாரமாகி முடிந்துவிட்டது.

சீன உரத்தின் தரம் குறித்த சிக்கலால் இந்தியாவிலிருந்து திரவ இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. உண்மையில் இராஜதந்திர அறிவுடைய அரசாங்கமாக இருந்தால் அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்காது.

சீனாவுக்கும், இந்தியாவிற்கும் இடையிலான பனிப்போர் உலகறிந்த விடயமாகும். அவ்வாறிருக்கையில் இவ்வாறான முட்டாள்த்தனமான முடிவை எமது அரசாங்கம் எடுத்தமையே சீனாவின் அச்சுறுத்தலுக்கும் அழுத்தத்திற்கும் உள்ளாகக் காரணமாகும். இதனால் தற்போது இலங்கை பாரதூரமான இராஜதந்திர அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment