(நா.தனுஜா)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்கொட்லாந்து விஜயத்தையடுத்து, இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைகளுக்கு நீதி கோரும் வகையில் அந்நாட்டின் பிரபல பத்திரிகைகள் வாயிலாக புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'விளம்பர பிரசாரங்கள்' தொடர்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கிளாஸ்கோ மாநாடு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், அம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சனிக்கிழமை காலை ஸ்கொட்லாந்திற்குப் பயணமானார்.
அவரது வருகையை அடுத்து இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து பிரிட்டன், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து கடந்த ஒரு வார காலமாக ஸ்கொட்லாந்தில் வெளியாகும் பிரபல பத்திரிகைகள் வாயிலாகவும் ஸ்கொட்லாந்தின் பொது இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டிஜிட்டல் காட்சிப்படுத்தல்கள் ஊடாகவும் இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைகளுக்கு நீதி கோரும் வகையிலான பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர்.
அந்தப் பிரசாரங்களின் வரிசையில் 'படுகொலையாளர்கள் மரங்களை நடுகின்றார்கள்' என்ற தலைப்பில் ஸ்கொட்லாந்தின் 'த ஹெரால்ட்' மற்றும் 'த நஷெனல்' ஆகிய பத்திரிகைகளில் பிறிதொரு விளம்பரம் வெளியாகியுள்ளது.
இலங்கை மண்ணில் இராணுவ உடையணிந்தவர்கள் மண்டையோடுகளுக்கு மேல் மரங்களை நடுவதுபோன்ற ஓவியத்தைத் தாங்கியுள்ள மேற்படி விளம்பரத்தில், 'இவ்வாரம் கோப் 26 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவை ஸ்கொட்லாந்து வரவேற்றிருக்கின்றது.
போர்க் குற்றச்சாட்டுக்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் காலநிலைமாற்ற சவாலைக் கையாள்வதற்கான தலைமைத்துவத்தை வழங்குவது குறித்த இலங்கையின் அறிவிப்பை நாம் சந்தேகக்கண்கொண்டு நோக்க வேண்டியுள்ளது' என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்டவை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவம், இப்போது தமிழ் மக்களின் சடலங்களின் மீது பயிர்களை நடுகின்றது. காலநிலை தொடர்பான நீதியும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதியும் பிரிக்கப்பட முடியாதவையாகும் என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 'மனித உரிமைகளை மீறியவர்களுக்கு ஸ்கொட்லாந்து பொலிஸ் பயிற்சிகளை வழங்கக்கூடாது, மாறாக அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்' என்ற தலைப்பில் 'த ஹெரால்ட் பத்திரிகையில் கட்டுரைவடிவில் முழுப்பக்க விளம்பரமொன்று வெளியாகியுள்ளது.
'ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன மற்றும் இலங்கைப் பொலிஸ் மற்றும் கடந்த இரு தசாப்த காலத்தில் இலங்கை இராணுவத்தில் கட்டளையிடக் கூடிய முக்கிய பதவிகளை வகித்தவர்கள் பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்களது மேற்பார்வையின் கீழ் எண்ணிலடங்காத தமிழர்கள் கடத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுடன் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடொன்றின் மரியாதைக்குரிய தலைவர் என்ற விதத்திலேயே செயற்படுகின்றார்' என்று அந்த விளம்பரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஸ்கொட்லாந்தின் மிகப்பழமையான பிரபல பத்திரிகையான 'த ஹெரால்ட்' இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகை குறித்து ஸ்கொட்லாந்து மக்களை எச்சரிக்கும் வகையில் 'கோட்டாபய ராஜபக்ஷ உங்கள் நகரத்திற்கு வருகின்றார்' என்ற தலைப்பிலான விளம்பரம் வெளியாகியிருந்தது.
அதேபோன்று புலம்பெயர் இலங்கைத் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'எங்கள் நிலம்' என்ற பிரசாரத்தின் ஓரங்கமாக 'த நஷெனல்' என்ற மற்றுமொரு ஸ்கொட்லாந்து பத்திரிகையில், இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் காடழிப்பு தொடர்பான விளம்பரமும் வெளியானது.
அத்தோடு இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைகளுக்கான பொறுப்புக் கூறலை வலியுறுத்தும் விதமாகவும் இனப் படுகொலைகள் தொடர்பில் தேடப்படும் ஒருவராக கோட்டாபய ராஜபக்ஷவை முன்னிறுத்தும் வகையிலுமான வாசகம் அடங்கிய டிஜிட்டல் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் புலம்பெயர் தமிழர்களின் ஏற்பாட்டில் ஸ்கொட்லாந்து பாராளுமன்றக் கட்டடம் உள்ளடங்கலாக பொது இடங்கள் (ஸ்கொட்லாந்தின்) பலவற்றிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment