இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட திரவ நனோ நைட்ரஜன் உரத்தின் விலை குறைப்பு - அமைச்சர் மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 24, 2021

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட திரவ நனோ நைட்ரஜன் உரத்தின் விலை குறைப்பு - அமைச்சர் மஹிந்தானந்த

(எம்.மனோசித்ரா)

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட திரவ நனோ நைட்ரஜன் உரத்தின் ஒரு லீற்றருக்கான விலை 2.5 டொலரால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒட்டு மொத்த உர இறக்குமதிக்கான விலை 5.2 மில்லியன் டொலர்களால் குறைவடைந்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உரம் இறக்குமதி மற்றும் விநியோகித்தல் என்பவற்றுடன் தொடர்புடைய செயற்பாடுகள் சேதனப் பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சின் நிர்வாகத்தின் கீழேயே முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கமைய இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட திரவ நனோ நைட்ரஜன் உரத்திற்கான விலை மனு கோரல் விடயங்களும் இந்த இராஜாங்க அமைச்சினாலேயே முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு சீன உர இறக்குமதியில் ஏற்பட்ட சிக்கலால் எமக்கு காணப்பட்ட ஒரேயொரு மாற்று வழி இந்தியாவிலிருந்து திரவ உரத்தை இறக்குமதி செய்வதேயாகும். இதற்காக விசேட தொழிநுட்ப குழுக்கள் அமைக்கப்பட்டு, அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் முதற்கட்ட உரம் இறக்குமதி செய்யப்பட்ட போது, அதில் விலை குறித்த சிக்கல் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டது. இது தொடர்பில் நான் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கலந்துரையாடினேன்.

அதனையடுத்து இறக்குமதியாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டு, நிதி அமைச்சின் செயலாளர், இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோரால் குறித்த உரத்தின் விலை குறைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய ஒரு லீற்றர் திரவ உரத்தின் விலையை 2.5 டொலர்களால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் மூலம் ஒட்டு மொத்த இறக்குமதி விலை 5.2 மில்லியன் டொலர்களால் குறைவடைந்துள்ளது. அமைச்சின் விலைமனு கோரல் குழுவினாலேயே இவ்அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment