இலங்கைக்கு ஆதரவாகவிருந்த சீனாவையும் பகைத்துக் கொள்ள நேர்ந்துள்ளது : இராணுவ பலத்தை பிரயோகித்து பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த முடியாது - சந்திம வீரக்கொடி - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

இலங்கைக்கு ஆதரவாகவிருந்த சீனாவையும் பகைத்துக் கொள்ள நேர்ந்துள்ளது : இராணுவ பலத்தை பிரயோகித்து பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த முடியாது - சந்திம வீரக்கொடி

(இராஜதுரை ஹஷான்)

பொது ஒழுங்கிற்கு அப்பாற்பட்டு சீனாவிலிருந்து உரம் இறக்குமதி செய்ய முற்பட்டதால் இன்று விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கு ஆதரவாகவிருந்த சீனாவையும் பகைத்துக் கொள்ள நேர்ந்துள்ளது. இராணுவ பலத்தை பிரயோகித்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

காலி பிரதேசத்தில் புதன்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொது ஒழுங்கு முறைமைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு உரம் இறக்குமதி செய்ய முனைந்ததால் ஒருபுறம் உரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், மறுபுறம் இராஜதந்திர மட்டத்திலும் பகைமை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் பொது ஒழுங்கிற்கு அப்பாற்பட்டு உரத்தை இறக்குமதி செய்யும் தீர்மானம் எடுத்ததால் இன்று பெரும் பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது.

முறையான பரிசோதனை இல்லாமல் சீனாவிலிருந்து சேதனப் பசளை இறக்குமதி செய்யப்பட்டது. பெற்றுக் கொள்ளப்பட்ட உர மாதிரிகளில் இலங்கையின் காலநிலைக்கும், மண் வளத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணங்கிகள் அடங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட உரம் திருப்பியனுப்பி வைக்கப்பட்டது. புறக்கணிக்கப்பட்ட உரத்தை நாட்டுக்குள் மீண்டும் கொண்டுவருவதற்கு சீனா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

உலகளாவிய மட்டத்தில் ஏனைய நாடுகளை பகைத்துக் கொண்டதை போன்று தற்போது சீனாவையும் பகைத்துக் கொண்டுள்ளோம்.

உர விவகாரத்தில் சீனாவுடன் இராஜதந்திர மட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சீனா இலங்கையின் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளது. இதற்கு யார் பொறுப்புக்கூற வேண்டும். இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறான தீர்மானங்களை எடுக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டாம்.

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை நியாமற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இராணுவ பலத்தை பிரயோகித்து அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை ஜனநாயக நாட்டில் ஒருபோதும் முன்னெடுக்க முடியாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.

No comments:

Post a Comment