அமைச்சரவையில் பூனைகளாக இருந்துவிட்டு வெளியில் சிங்கங்களாக கர்ச்சிகின்றனர் : அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமென்பதையே நாமும் வலியுறுத்துகிறோம் - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி - News View

About Us

About Us

Breaking

Sunday, November 21, 2021

அமைச்சரவையில் பூனைகளாக இருந்துவிட்டு வெளியில் சிங்கங்களாக கர்ச்சிகின்றனர் : அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமென்பதையே நாமும் வலியுறுத்துகிறோம் - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி

(ஆர்.யசி)

அரசாங்கத்தில் விமர்சனங்கள் இருக்கலாம், அவற்றை அரசாங்கத்திற்குள் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர அரசாங்கத்தை பலவீனப்படுத்தக்கூடாது. எனினும் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளவே பங்காளிக் கட்சிகள் சில முயற்சிக்கின்றன என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவிப்பதுடன், அமைச்சரவையில் பூனைக்குட்டிகள் போல் இருந்துவிட்டு வெளியில் சிங்கமாக மாறுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் எனவும் விமர்சனக் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் காணப்பட்டு வருகின்ற நிலையில், அவர்களின் வெளிப்படையான கருத்து மோதல்கள் பாராளுமன்ற விவாதங்களின் போதும், ஊடக சந்திப்பு மேடைகளிலும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட உறுப்பினர்கள் அண்மையில் பிரதமரிடம் சில காரணிகளை முன்வைத்திருந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின் வரிசை உறுப்பினர்களின் வாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின் வரிசை உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருவதுடன் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கூறுகையில், அரசாங்கத்தில் சில தவறுகள் இடம்பெறுவது குறித்தும் நாமும் முரண்படுகின்றோம். ஆனால் அவற்றை உடனடியாக திருத்திக் கொள்ள அரசாங்கத்தில் உள்ள மேலிடத்திற்கு முறையாக கொண்டு சேர்க்கின்றோம். மாறாக வெளிப்படையாக விமர்சித்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த நாம் முயற்சிக்கவில்லை.

ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றனர். அரசாங்கத்தில் பேச வேண்டிய விடயங்களை வெளியில் பிரசித்திபடுத்தி அரசாங்கத்தை வீழ்த்தும் சூழ்ச்சியை முன்னெடுத்து வருகின்றனர்.

அமைச்சரவையில் பூனைகள் போன்று அமர்ந்துகொள்ளும் ஒரு சிலர் வெளியில் சிங்கங்கள் போன்று கர்ச்சித்துக் கொண்டுள்ளனர். தவறுகள் முரண்பாடுகள் இருப்பின் அவற்றை அமைச்சரவையில் பேசி தீர்க்க வேண்டும். அதை விடுத்து வெளியில் கூறுவது மிக மோசமான அரசியல் நாகரீகம்.

இவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதையே நாமும் வலியுறுத்திக் கொண்டுள்ளோம். அரசாங்கத்தை குழப்பும் நபர்கள் வெளியேறினால் எம்மாலும் தூய்மையான அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியும் என்றார்.

No comments:

Post a Comment