இந்திய, சீன உர இறக்குமதிகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் : அமைச்சர் மஹிந்தானந்தவிடம் குற்றப் புலனாய்வினர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் - சம்பிக்க ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Monday, November 22, 2021

இந்திய, சீன உர இறக்குமதிகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் : அமைச்சர் மஹிந்தானந்தவிடம் குற்றப் புலனாய்வினர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் - சம்பிக்க ரணவக்க

(இராஜதுரை ஹஷான்)

இந்திய திரவ உர இறக்குமதியில் பாரிய நிதி சோடி இடம்பெற்றுள்ளது என முன்வைத்த குற்றச்சாட்டு உண்மை என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து சேதனப் பசளை உர இறக்குமதி, இந்தியாவில் இருந்து திரவ உரம் இறக்குமதி ஆகியவற்றின் ஊடாக இடம்பெற்றுள்ள முறைகேடுகளுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி ஊடாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நனோ - யூரியா திரவ உரத்தின் ஊடாக பாரிய நிதி மோசடி இடம் பெற்றுள்ளது என்பதை இம்மாதம் 3 ஆம் திகதி எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் பகிரங்கப்படுத்தினேன்.

ஊடக பிரபல்யத்திற்காக போலியாக குற்றச்சாட்டுக்களை நான் முன்வைப்பதாக குறிப்பிட்ட விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்தியாவில் இருந்து திரவ உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது எனவும் அதில் எவ்வித நிதி மோசடிகளும் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

விவசாய உர கூட்டுறவு நிறுவனத்தின் தொழினுட்ப அதிகாரிகள் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். அந்த அதிகாரிகளில் அனில் யாதேவ் என்பவர் கடந்த 18 ஆம் திகதி ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்து அதில , இறக்குமதி செய்யப்பட்ட திரவ உரம் தொடர்பில் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது ஊடகச் சந்திப்பில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட 500 மில்லி லீற்றர் திரவ உரத்தின் இந்திய விலை 240 ரூபா என அவர் குறிப்பிட்டுள்ளார். நானும் அதனையே குறிப்பிட்டேன். ஒரு லீட்டரின் விலை 480 ரூபாவாக காணப்படுகிறது.

இந்தியாவில் இருந்து கொமர்ஷல் உர நிறுவனத்தின் ஊடாக திரவ உரம் இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியது. இருப்பினும் திரவ உரம் தனிப்பட்ட தரப்பினர் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

2.1 மில்லியன் லீட்டர் திரவ உரத்தை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு 52 டொலர் செலவாகும் என அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்தியாவில் இருந்து திரவ உரத்தை இறக்குமதி செய்த நிறுவனம் கடந்த ஒக்டோபர் 18 ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் வெளியான நாளன்று வங்கி கணக்கை ஆரம்பித்துள்ளது. அதன் பிறகு வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

மறுபுறம் சீன நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டு திருப்பியனுப்பி வைக்கப்பட்ட சேதனப் பசளை என்று குறிப்பிடப்படுகின்ற உரம் தேசிய பாதுகாப்பிற்கு மாத்திரமல்ல இராஜதந்திர உறவிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உர இறக்குமதியின் பின்னணியில் பிரதமரின் செயலாளரது உறவினர் உள்ளார் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உர இறக்குமதி தொடர்பில் சீன நிறுவனம் நட்டஈடு கோரியுள்ளது. அதனை அரசாங்கமோ, மக்கள் வங்கியோ செலுத்த வேண்டியதில்லை. முறையற்ற இறக்குமதியுடன் தொடர்புடைய நபர் தனிப்பட்ட நிதியிலிருந்து அதனை செலுத்திக் கொள்ள வேண்டும்.

சேதனப் பசளை உரம் மற்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட திரவ உரம் ஆகியவற்றின் ஊடாக இடம்பெற்றுள்ள முறைக்கேடுகள் தொடர்பில் அரசாங்கம் நிச்சயம் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment