பிரபாகரனை தேசிய தலைவரென புகழ்ந்த கஜேந்திரன் : கொந்தளித்து சீறிப்பாய்ந்த ஆளுந்தரப்பு : சபையை நெருக்கடிக்கு மத்தியில் வழிநடத்தினார் வேலுகுமார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 24, 2021

பிரபாகரனை தேசிய தலைவரென புகழ்ந்த கஜேந்திரன் : கொந்தளித்து சீறிப்பாய்ந்த ஆளுந்தரப்பு : சபையை நெருக்கடிக்கு மத்தியில் வழிநடத்தினார் வேலுகுமார்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசிய தலைவரென புகழ்ந்து உரையாற்றிய கஜேந்திரன் எம்.பியின் கருத்துக்களினால் சபையில் ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொந்தளித்து சீறிப்பாய்ந்ததுடன் சபையை வழிநடத்திக் கொண்டிருந்த வேலுகுமார் எம்.பியுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய கலைநுட்ப, மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில், எமது தேசத்தின் விடுதலைக்காக முப்பது ஆண்டுகள் ஆயுதமேந்தி போராடியிருந்த எமது தேசத்தின் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் காலத்திலே போதைப் பொருள் வியாபாரம் இடம்பெற்றதாக அப்பட்டமான பொய்யை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா குறிப்பிட்டிருந்தார். இதனை வன்மையாக கண்டிப்பதுடன் முற்றாக நிராகரிக்கின்றேன் என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் சீத்தா அரம்பேபோல, இந்த உயரிய சபையில் பயங்கரவாதி ஒருவரை தேசிய தலைவராக சித்தரித்து பேசுகின்றார். நீங்கள் ஒரு தமிழ் உறுப்பினர் என்ற வகையில் கஜேந்திரன் எம்.பி கூறிய விடயங்கள் விளங்காது இருந்திருக்காது. ஆகவே ஹன்சார்ட் பதிவில் இருந்து இந்த வாக்கியங்களை நீக்குங்கள் என்றார்.


இதன்போது சபையை வழிநடத்திக் கொண்டிருந்த வேலு குமார் எம்.பி, மதிப்பிற்குரிய இராஜாங்க அமைச்சர் அவர்களே, குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரத்தில் என்னால் தலையிட முடியாது. குறுக்கிடவும் முடியாது. எனினும் உங்களின் கோரிக்கையை சபாநாயகரிடம் நான் கொண்டு சேர்கின்றேன் என்றார். எனினும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சபையை வழிநடத்திய வேலுகுமார் எம்.பியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஆளுந்தரப்பு உறுப்பினர் முஹம்மட் முசம்மில் எம்.பி கூறுகையில், விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இந்த நாட்டில் இலட்சக்கணக்கான மக்களை கொலை செய்த ஒருவரை வீரராக்கி இந்த சபையில் பேச முடியாது. குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் கருத்து மக்கள் மத்தியில் வைராக்கியத்தை பரப்பும் செயற்பாடாகும். இதனை சபைக்குள் கொண்டுவர அனுமதிக்க முடியாது. ஆகவே தயவுசெய்து அவரது உரையை ஹன்சார்ட் பதிவில் இருந்து அகற்றுங்கள். அவருக்கு விரும்பிய அனைத்தையும் சபையில் கூற முடியாது.

வேலுகுமார் எம்.பி, உங்களின் முறைப்பாடுகளை சபாநாயகரிடம் அறிவிக்கின்றேன்.

முஹம்மட் முசம்மில் எம்.பி, இப்போது சபாபீடத்தில் நீங்கள்தான் உள்ளீர்கள். சபாநாயகர் இங்கு வந்து உரையை ஹன்சார்ட் பதிவில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான அதிகாரம் உங்களுக்கும் உள்ளது. ஆகவே உரையை நீக்குங்கள்

வேலுகுமார் எம்.பி, என்னால் சபாநாயகருக்கு முறையிட மட்டுமே முடியும், எனது அதிகார பரப்புக்கு உற்பட்ட விடயங்களையே என்னால் செய்ய முடியும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த சபையில் பல்வேறு கருத்துக்கள் உள்வாங்கப்படுகின்றது. ஒரு சிலரது கருத்துக்களை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் அதனை நிராகரிக்க முடியாது. பல்வேறு சமூகத்தின் பிரதிநிதிகளாக இங்கு பலர் உள்ளனர். ஒரு உறுப்பினர் அவரது நிலைப்பாட்டை முன்வைக்கின்ற நிலையில் அந்த குரலை மௌனிக்க இடமளிக்க கூடாது. பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு அவரது கருத்து பிடிக்கவில்லை என்பதற்காக அவரது குரலை மௌனிக்க செய்யக்கூடாது என்பதை கேட்டுக்கொள்கின்றேன்.

இதன்போது தொடர்ச்சியாக ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஆளுந்தரப்பு பின்வரிசை உறுப்பினர்கள், வரப்பிரசாதங்களை தடுக்க கூடாது, அதேபோல் வரப்பிரசாதங்களை பயன்படுத்தி பயங்கரவாத தலைவர் ஒருவரை தேசிய தலைவராக நிறுவுவதற்கு சபையை வழிநடத்தும் நீங்கள் இடமளிக்க வேண்டாம். பிரபாகரனை நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தியுடன் ஒப்பிடவே இவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரபாகரன் ஒரு கொலைகாரன், பயங்கரவாதி. இதனை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றனர்.

இதற்கு பதில் தெரிவித்த வேலுகுமார் எம்.பி, நீங்கள் முன்வைக்கும் காரணிகளை சபாநாயகரிடம் கூறி அவரது உரையில் சர்ச்சைக்குரிய விடயங்களை ஹன்சார்ட் அறிக்கையில் இருந்து நீக்குவது குறித்த கோரிக்கையை சபாநாயகரிடதில் அறிவிக்கின்றேன், எனக்குள்ள அதிகார எல்லைக்குள் என்னால் என்ன செய்ய முடியுமோ அதனையே முன்னெடுக்க முடியும் என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய முசம்மில் எம்.பி மற்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள், தான் சபையில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி பேசிய விடயங்கள் காணொளிப்பதிவில் ஒலி நிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் திட்டமிட்டே இதனை செய்கின்றீர்கள் என்றனர்.

எனினும் அதனை பொருட்படுத்தாது வேலுகுமார் எம்.பி சபையை நெருக்கடிக்கு மத்தியில் வழிநடத்தினார். எனினும் தொடர்ச்சியாக ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் வேலுகுமார் எம்.பியை கடுமையாக விமர்சித்து அழுத்தம் கொடுத்ததுடன் கஜேந்திரன் எம்.பியையும் திட்டித்தீர்த்தனர். எனினும் குழப்பங்களுக்கு மத்தியிலும் உரையாற்றிய கஜேந்திரன் எம்.பியின் உரையின் பின்னர் உரையாற்றிய ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கஜேந்திரன் எம்.பியை விமர்சித்து உரையாற்றினர்.

No comments:

Post a Comment