பொருட்களை தட்டுப்பாடின்றி சலுகை விலையில் வழங்க அரசு நடவடிக்கை : நல்லாட்சியில் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்றது - அமைச்சர் பந்துல - News View

Breaking

Tuesday, November 23, 2021

பொருட்களை தட்டுப்பாடின்றி சலுகை விலையில் வழங்க அரசு நடவடிக்கை : நல்லாட்சியில் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்றது - அமைச்சர் பந்துல

அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இன்றி சலுகை விலையில் வழங்குவதற்காக ஆயிரம் புதிய சதொச கிளைகளை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 25 புதிய சதொச கிளைகளை திறந்து வைக்கும் ஆரம்ப நிகழ்வு அநுராதபுரம் ரம்பாவ நகரில் அண்மையில் இடம்பெற்ற போது அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டும் ஒரே தடவையில் 25 புதிய சதொச கிளைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையை ஒன்றுபட்ட நாடாக மாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கிய பொருளாதாரம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் வருடா வருடம் சரிவை நோக்கி சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை பொறுப்பேற்ற பின்னர் வீழ்ச்சியடைந்திருந்த இந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் சிரமத்துடன் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பூகோல பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தாலும் சகல பிரதேச செயலக பகுதிகளிலும் 3 சதொச நிலையங்களை திறப்பதன் மூலம் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை குறைபாடின்றி சலுகை விலையில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

உலகளாவிய நாடுகளினுள் உற்பத்தி விநியோகம் வலைப்பின்னல் சரிவடைந்து செல்வதனால் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து காணப்படும் போது பொறுப்பில்லாமல் எதிர்க்கட்சி நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு குறுகிய அரசியல் நோக்கத்தை அடைவதற்கு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நோய்த் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க சகல நாடுகளும் நடவடிக்கை எடுத்து வரும் போது ஆர்ப்பாட்டம் செய்யும் ஒரே நாடு இலங்கை என்பதை காட்டுவதற்காக எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலக. வல்லரசுகள் வீழ்ச்சியடையும் போது சிக்கனமாக வேலை செய்து இந்நாட்டு மக்களை பாதுகாக்க கூடிய சகல நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதனூடாக அத்தியாவசிய உணவு வகைகளை உயர் தரம் மற்றும் குறைந்த விலையின் கீழ் விநியோகிப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான சமகால அரசாங்கம் பொறுப்பேற்று செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த இலக்கை அடைந்து கொள்ள எதிர்வரும் வருடங்களினுள் ஆயிரம் சதொச கிளைகளை விருத்தி செய்யவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, சதொச நிறுவனத்தின் தலைவர் ரியர் அத்மிரால் ஆனந்த பீரிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அநுராதபுரம் நிருபர்

No comments:

Post a Comment