பலாங்கொடை வைத்தியசாலை கழிவுகளால் பொதுமக்கள் அசௌகரியம் : விலங்குகள் உணவாக உட்கொள்ளும் அவலம் - News View

Breaking

Tuesday, November 23, 2021

பலாங்கொடை வைத்தியசாலை கழிவுகளால் பொதுமக்கள் அசௌகரியம் : விலங்குகள் உணவாக உட்கொள்ளும் அவலம்

பலாங்கொடை வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் சத்திர சிகிச்சைகளின் பின்னர் கழிவுகள் முறையாக அகற்றப்படாமையால் அவற்றை விலங்குகள் உணவாகக் உட்கொள்ளும் நிலைமை காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கழிவுகளை பிராணிகள், பறவைகள் உணவாக உட்கொள்ளும் காட்சிகளை வழமையாக காணக் கூடியதாக உள்ளதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக்கூறியும் இவ்விடயத்தில் நிர்வாகம் கரிசனை காட்டுவதாக தெரிவில்லையென வைத்தியசாலை ஆளணியினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் வினவியபோது இந்த கழிவுகள் சில சந்தர்ப்பங்களில் பிராணிகளால் உணவாகக் உட்கொள்ளப்படுகின்றது. 

திறந்த வெளியில் உள்ள சில குப்பை கொள்கலன்களில் ஒதுக்கப்படும் இவ்வாறான கழிவுகள் சில சமயங்களில் இவ்வாறான நிலைக்கு உட்படுவது சாதாரணமான விடயமாகும் எனவும் தெரிவித்தனர்.

எனினும் இவ்விடயத்தில் வைத்தியசாலை நிர்வாகம் கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாமையே இதற்கு காரணம் எனவும் இக்காட்சிகள் வழமையாக இடம் பெறுவதால் தாம் அசெளகரியத்துக்கு உட்படுவதாகவும் வைத்தியசாலை ஆளணியினர் தெரிவிக்கின்றனர். 

இவ்விடயத்தில் வைத்தியசாலை ஆளணியினர் மட்டுமன்றி இங்கு வந்து செல்லும் நோயாளர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்விடயத்தை வைத்தியசாலை நிர்வாகம் சர்வ சாதாரண விடயமாக நினைக்காமல் வெளியில் இவை வீசப்படுவதையோ அல்லது திறந்த வெளி குப்பைக் கொள்கலன்களில் இவை பிராணிகளால் இழுத்து உணவாகக் கொள்ளும் அளவுக்கு நிலைமையை மோசமாகாமல் பாதுகாப்பாக அகற்றும் முறையான திட்டமொன்றைக் கடைப்பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

( இரத்தினபுரி நிருபர்)

No comments:

Post a Comment