(எம்.ஆர்.எம்.வசீம்)
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவை உடனடியாக அவரது அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு பொதுஜன பெரமுன கட்சியின் பிரபல உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்விடம் கேட்டுக் கொண்டுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சி வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.
யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவது, அது தொடர்பான ஒப்பந்தம் மற்றும் அரசாங்கத்தின் தீர்மானங்களை வலுசக்தி அமைச்சர் கடுமையாக விமர்சித்து வருவதுடன் பொதுஜன பெரமுன நிறுவுனர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வின் செயற்பாடுகளையும் விமர்சித்து வருவதே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் உதய கம்மன்பிலவின் தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய கட்சி அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக இருந்தாலும் அதனை பிரதிநிநித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பது அமைச்சர் உதய கம்மன்பில மாத்திரமேயாகும்.
அதனால் அவர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிச் சென்றாலும் அரசாங்கத்துக்கு எந்த பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதால் அது அரசாங்கத்துக்கு பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவும் இவர்கள் சுட்டிக்காட்டி இருப்பதாக தெரியவருகின்றது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் எதிர்வரும் 4ஆம் திகதி நாட்டுக்கு திரும்ப இருக்கின்றார். அவர் நாடு திரும்பியதுடன் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment