நிலப்பரப்புகளை மீட்டெடுக்கவும் உணவு அமைப்புகளை மாற்றவும் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்யப் போவதாக அமேசன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அறிவித்துள்ளார்.
தனது பெசோஸ் எர்த் ஃபண்ட் மூலமாக இது நிறைவேற்றப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கிளாஸ்கோவில் COP26 பருநிலை மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர் விண்வெளிக்குச் சென்றபோது இயற்கை பலவீனமடைந்திருப்பதை உணர்ந்ததாகக் கூறினார்.
பூமியில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக விண்வெளிக்குச் செல்வதற்காக பணத்தை செலவழிப்பதாக பெசோஸ் உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் விமர்சனங்களுக்கு உள்ளானார்கள்.
உலகின் மிகப்பெரிய ஓன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான அமேசனின் சுற்றுச்சூழல் நடைமுறைகள் குறித்து அதன் தொழிலாளர்களாலும் அந்த நிறுவனம் விமர்சிக்கப்பட்டது.
"உலகின் பல பகுதிகளில் ஏற்கெனவே கார்பன் உறிஞ்சும் நிலையில் இருந்து கார்பன் உமிழும் நிலைக்கு இயற்கை மாறியிருக்கிறது" என்று கிளாஸ்கோ மாநாட்டில் பெசோஸ் பேசினார்.
பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக பெசோஸ் எர்த் ஃபண்ட் ஒட்டு மொத்தமாக 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழிக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் தனது ரொக்கெட் கப்பலான நியூ ஷெப்பர்டில் மேற்கொண்ட பயணம் பூமியின் பாதிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தது எனவும் பெசோஸ் கூறினார்.
"விண்வெளியில் இருந்து பூமியைப் பார்ப்பது நீங்கள் உலகைப் பார்க்கும் கண்ணாடியை மாற்றுகிறது என்று என்னிடம் கூறினார்கள். ஆனால் அது எவ்வளவு உண்மையாக இருக்கும் என்பதை உணர்வதற்கு நான் தயாராகவே இல்லை." என்று அவர் கூறினார்.
"அங்கிருந்து பூமியை திரும்பிப் பார்க்கும்போது, வளிமண்டலம் மிகவும் மெல்லியதாகத் தெரிகிறது. உலகம் மிகவும் குறுகிய எல்லைகளைக் கொண்டதாகவும், உடையக்கூடியதாகவும் தோன்றியது. இது தீர்க்கமான தசாப்தம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நம் உலகத்தைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும்."
கடந்த செப்டம்பரில், பெசோஸ் எர்த் ஃபண்ட் இயற்கை, பழங்குடி மக்கள் மற்றும் பண்பாடுகளைப் பாதுகாப்பதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை அளிக்க உறுதியளித்தது.
ஆப்பிரிக்காவின் விவசாய நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு சிதைந்துவிட்டதாகவும் ஆயினும் அதை மீட்க முடியும் என்றும் தனது நன்கொடை அறிவிப்பின்போது பெசோஸ் கூறினார்.
"மண் வளத்தை மேம்படுத்தவும், விளைச்சலை அதிகரிக்கவும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தண்ணீரை அதிக நம்பகமாக உருவாக்கவும், வேலைகளை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் முடியும். அதே நேரத்தில் கார்பனை உமிழ்வையும் கவனிக்க முடியும்" என்று அவர் கிளாஸ்கோ மாநாட்டில் கூறினார்.
பெசோஸ், சர் ரிச்சர்ட் பிரான்சன், எலோன் மஸ்க் ஆகியோர் விண்வெளி நிறுவனங்களை உருவாக்கியிருக்கிறார்கள். விண்வெளி ஆய்வை வியாபாரமாக்க முயற்சி செய்கிறார்கள்.
பணக்காரர்கள் விண்வெளி சுற்றுலாவில் ஈடுபடுவதை விட பூமியை காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இளவரசர் வில்லியம் கடந்த மாதம் கூறினார்.
No comments:
Post a Comment