இயலாமையை மறைக்க முற்படும் ஆயுதத்தையே மீண்டும் கையிலெடுப்பு - அரசாங்கத்தின் சதி அரசியலுக்கு மக்கள் இரையாகி விடக்கூடாது என்கிறார் விஜித ஹேரத் - News View

Breaking

Wednesday, November 3, 2021

இயலாமையை மறைக்க முற்படும் ஆயுதத்தையே மீண்டும் கையிலெடுப்பு - அரசாங்கத்தின் சதி அரசியலுக்கு மக்கள் இரையாகி விடக்கூடாது என்கிறார் விஜித ஹேரத்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்காத அரசாங்கம், அருட் தந்தை சிறில் காமினியை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துள்ளது. அரசாங்கம் அதன் இயலாமையை மறைக்க முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தும் ஆயுதத்தையே மீண்டும் கையிலெடுத்துள்ளது என விஜித ஹேரத் தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி உண்மையான பிரச்சினைகளை மூடி மறைக்கும் அரசாங்கத்தின் சதி அரசியலுக்கு மக்கள் இரையாகி விடக்கூடாது என்றும் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் புதன்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தன்னை கைது செய்யாமலிருப்பதற்கு அருட்தந்தை சிறில் காமினி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் கைது செய்யப்படுவாராயின் கத்தோலிக்க மக்கள் நிச்சயம் வீதிக்கு இறங்கி கடும் எதிர்ப்பை வெளியிடுவர்.

இதன் மூலம் பௌத்த மக்களுக்கும் கத்தோலிக்க மக்களுக்கும் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கும், வேறு வழிகளில் முஸ்லிம் மக்களுக்கும் பௌத்த மக்களுக்கும் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது.

அரசாங்கத்தின் இவ்வாறான சதி அரசியலுக்கு மக்கள் இரையாகி விடக்கூடாது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment