பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு : ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இதே நிலைமையே காணப்பட்டது ! ஒன்று கூடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுங்கள் ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு : ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இதே நிலைமையே காணப்பட்டது ! ஒன்று கூடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுங்கள் !

(எம்.மனோசித்ரா)

தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது என்பதற்காக பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. எனவே தற்போது கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மாத்திரமின்றி வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்கள் சகலருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் புதன்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மாணவர்களுக்கான அடுத்த கட்ட தடுப்பூசி வழங்கல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ ஆலோசனை குழுவின் பரிந்துரைக்கமையவே அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

தற்போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்பதற்காக கொவிட் அபாயமும் குறைவடைந்து விட்டதாகக் கருத முடியாது.

கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இதே போன்ற நிலைமையே காணப்பட்டது. எனினும் பாதுகாப்பற்ற நடமாட்டம் மற்றும் மக்கள் ஒன்று கூடல் உள்ளிட்ட காரணிகளால் வைரஸ் பரவல் தீவிரமடைந்தது. அத்தோடு டெல்டா பிறழ்வும் தீவிரமாகப் பரவியது.

இதே போன்றதொரு நிலைமை மீண்டுமொருமுறை ஏற்படாது என்று கூற முடியாது. எனவே பண்டிகைக் காலங்களில் மக்கள் ஒன்று கூடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். குறிப்பாக பொதுப் போக்கு வரத்தைப் பயன்படுத்துபவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது என்பதற்காக பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை.

எனவே தற்போது கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மாத்திரமின்றி , அறிகுறியுடனோ அல்லது அறிகுறி இன்றியோ வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்கள் சகலருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.

அத்தோடு சகல பிரதேசங்களிலும் எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனைகளும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. கொவிட் பரவல் குறித்த எதிர்வுகூறல்கள் தொடர்பிலும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.

No comments:

Post a Comment