தமிழ் மக்களின் விடயங்களை கவனத்தில் கொண்டு முழுமையான அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைப்போம் - ஞானசார தேரர் - News View

Breaking

Monday, November 22, 2021

தமிழ் மக்களின் விடயங்களை கவனத்தில் கொண்டு முழுமையான அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைப்போம் - ஞானசார தேரர்

(ஆர்.யசி)

புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயங்களில் தமிழ் மக்களின் நிலைப்பாடு, அவர்கள் எதிர்கொள்ளும் அசம்பாவிதங்கள், அவர்களுக்கு எதிராக இடம்பெற்றுக் கொண்டுள்ள அநியாயங்கள், சட்ட சமமில்லா தன்மைகள், அடக்குமுறைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்து தாம் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், அவற்றையெல்லாம் சரியாக ஒன்று சேர்த்து முழுமையான அறிக்கையொன்றை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் "ஒரு நாடு ஒரு சட்டம்" ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

"ஒரு நாடு ஒரு சட்டம்" ஜனாதிபதி செயலணியின் வேலைத்திட்டங்கள் மற்றும் தற்போது அவர்கள் வடக்கில் முன்னெடுத்துவரும் ஆய்வு நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "ஒரு நாடு ஒரு சட்டம்" செயலணி மூலமாக புதிய அரசியல் அமைப்பு உருவாக்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் பல விமர்சனக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் நாம் மிகவும் சரியான வேலைத்திட்டத்தையே முன்னெடுத்து வருகின்றோம்.

குறிப்பாக சிறுபான்மை மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது வடக்கில் எமது பணிகளை ஆரம்பித்துள்ளோம், நேற்றுமுன்தினம் தொடக்கம் வவுனியாவில் இருந்து இந்த கருத்து முன்னெடுப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மக்களின் பிரச்சினைகள், அவர்களின் நிலைப்பாடுகள், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் காரணிகள் என்பன தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றது. அது குறித்த கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏனைய சகல பகுதிகளுக்கும் நாம் பயணிப்போம்.

குறிப்பாக புதிய அரசியல் அமைப்பு விடயங்களில் தமிழ் மக்களின் நிலைப்பாடு, இப்போது வரையில் அவர்கள் எதிர்கொள்ளும் அசம்பாவிதங்கள், அவர்களுக்கு எதிராக இடம்பெற்றுக் கொண்டுள்ள அநியாயங்கள், சட்ட சமமில்லா தன்மைகள், அடக்குமுறைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்து நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். அவற்றையெல்லாம் சரியாக ஒன்றுசேர்த்து முழுமையான அறிக்கையொன்றை ஜனாதிபதியிடம் ஒப்படைப்போம்.

எமக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தில் பாகுபாடு இல்லாது வெகு விரைவில் நிறைவு செய்யவே நாம் முயற்சிக்கின்றோம். இது எம் அனைவரதும் அவசியமான தேவைப்படாகும். ஆகவே அதனை செய்து முடிக்க வேண்டிய பாரிய பொறுப்பு எம்மிடம் உள்ளது எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment